காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகளை ஆழப்படுத்தி அதிக நீரை தேக்குவதற்கு நடவடிக்கை


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகளை ஆழப்படுத்தி அதிக நீரை தேக்குவதற்கு நடவடிக்கை
x
தினத்தந்தி 19 March 2017 2:39 AM IST (Updated: 19 March 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகளை ஆழப்படுத்தி அதிக நீரை தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

 காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனை பேணி காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை மூலம் ஏரிகளில் பராமரிப்பு பணிகள், தூர்வாரி, ஆழப்படுத்தி அதிக நீரை தேக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விதை நெல் கொள்முதல்

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 680 மெட்ரிக் டன் அளவுக்கு மானியம் வழங்கப்பட்டு முன்னுரிமைபடி விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல்விதைகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் இந்த மாவட்டத்திற்கு 950 மெட்ரிக் டன் விதை நெல் கொள்முதல் செய்யபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

   கூட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து தருதல், பாசன வாய்க்கால்களை சீரமைத்தல், ஏரிகளை தூர்வாருதல், பயிர்கடன் வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

   இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொறுப்பு) பாபு, வேளாண்மை இணை இயக்குனர் சீத்தாராமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லதா பானுமதி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story