கொடைக்கானல் ஏரிச்சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதால் போக்குவரத்து பாதிப்பு


கொடைக்கானல் ஏரிச்சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 March 2017 3:15 AM IST (Updated: 19 March 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் ஏரிச்சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்

கொடைக்கானல் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கீழ்குண்டாறு திட்டத்தின் கீழ் புதிதாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. கீழ்குண்டாறு பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக பழைய அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி இன்னும் தொடங்கவில்லை.

அந்த பணியை முதலில் முடித்த பிறகு, நகர்பகுதியில் குழாய் பதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கொடைக்கானல் ஏரிச்சாலையில் திடீரென குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. சாலையோரத்திலேயே மணல் கொட்டப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு

கொடைக்கானலில் சீசன் தொடங்க உள்ள நிலையில், ஏரியை சுற்றிலும் சுமார் 4½ கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கொடைக்கானல் ஏரிச்சாலையில் பொழுது போக்கு அம்சங்களும், வாகன நிறுத்துமிடமும் உள்ளது.

தற்போது ஏரிச்சாலையில் பள்ளம் தோண்டுவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதுகின்றனர். இதைக்கருத்தில் கொண்டு ஏரிச்சாலையில் குழாய் பதிக்கும் பணியை சீசன் முடிந்த பிறகு தொடங்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் குழாய் பதிக்கும் பணியை, சீசன் முடிந்த பிறகு தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story