சென்னை அனகாபுத்தூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்


சென்னை அனகாபுத்தூரில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்
x
தினத்தந்தி 19 March 2017 3:11 AM IST (Updated: 19 March 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அனகாபுத்தூரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் கடந்த 45 நாட்களாக பொதுமக்கள் கடுமையான அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னை,

பருவமழை பொய்த்துப் போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இந்த ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்துக்கொண்டு இன்னும் 30 முதல் 35 நாட்களுக்கு தான் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.

கடந்த மாதம் முதலே தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கி விட்டது. நகர் முழுவதும் பல இடங்களில் வீடுகளில் உள்ள குழாய்களில் குடிநீர் வருவது கிடையாது. காற்று தான் வருகிறது. அடிபம்புகளில் வரும் நீரும் குறைந்த அளவில் வருவதால் காலிக்குடங்களுடன் பொதுமக்களின் நீண்ட நேர காத்திருப்பும், குழாயடி சண்டைகளும் சென்னையில் அடிக்கடி பார்க்கும் காட்சியாக அமைந்து வருகிறது.

அனகாபுத்தூரின் அவலம்

சென்னையில் குடிநீர் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட முக்கியமான பகுதியாக அனகாபுத்தூர் உருவாகி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதியான அனகாபுத்தூர் நெசவு தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாக கருதப்பட்டு வருகிறது. இங்கு மட்டும் தோராயமாக 50 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். முத்துருளாண்டி நகர், வெங்கடேஸ்வரா நகர், பாரிநகர், இந்திராநகர், காமாட்சி நகர், விநாயகாநகர், தென்றல்நகர், அம்பேத்கர்நகர், காந்திநகர், பாலாஜிநகர், காமராஜபுரம் ஆகியவை முக்கிய இடங்களாகும்.

இங்கு கடந்த 45 நாட்களாக வீடுகளில் உள்ள குழாய்களில் குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். இதனால் வீடுகளுக்கு அருகே குடிநீர் பம்புகள் எங்கு உள்ளன? என்று காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஓடித்திரியும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

லாரி நீருக்கு ‘போட்டா போட்டி’

குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 2 அல்லது 3 தடவை தான் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அதிலும் போட்டா போட்டி காரணமாக பலருக்கு தண்ணீரே கிடைக்கவில்லை. லாரிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் இளமஞ்சள் நிறத்தில் கலங்கலாகவே காட்சி தருகிறது. இருந்தாலும் அதையும் கலங்காத மனதுடனே பொதுமக்கள் போட்டிபோட்டு பிடித்துக்கொள்கின்றனர்.  

குளிப்பது, துவைப்பது, பாத்திரம் கழுவுவது ஆகியவற்றுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கும் தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குடிப்பதற்கு மட்டும் 20 லிட்டர் கேன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் குடிநீர் கேன்கள் வினியோகிக்கும் பணி அங்கு பெருமளவு உயர்ந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிபம்புகளை தேடும் நிலைமை

இதுகுறித்து அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயபாண்டியன் என்பவர் கூறியதாவது:–

இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் சப்ளையில் பாதிப்பு இருந்துகொண்டே வந்தது. 2 நாட்கள், 5 நாட்கள், வாரம் ஒருமுறை என்பது மாறி இப்போது 1½ மாத காலமாகவே வீடுகளுக்கு குழாய்களில் வரும் குடிநீர் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அடிபம்புகளை தேடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.   

எனது வீட்டில் ஆர்.ஓ. எனப்படும் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதால் உப்புநீரை குடிநீராக மாற்றி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பெரும்பாலான வீடுகளில் இவ்வசதி இல்லை. லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீர் அனைவருக்கும் கிடைக்காத காரணத்தால், அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள குடிநீர் டேங்குக்கே சென்று குழாய்கள் மூலம் பொதுமக்கள் நீரை பிடித்து செல்கின்றனர். இதனால் அதிகாலை முதலே அப்பகுதியில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

வண்டி எடுத்துக்கொண்டு...

பணத்தட்டுப்பாடு வந்தபோது எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் கிடைக் கிறது? என்று வண்டி எடுத்துக்கொண்டு தேடும் நிலைமை இருந்தது. இப்போது குடிநீர் தட்டுப்பாட்டால் தண்ணீர் வரும் அடிபம்புகள் எங்கு உள்ளது? என்று காலிக்குடங்களுடன் வண்டியில் சென்று தேடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. நகரின் பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் இருந்தாலும் இப்பகுதியில் அது அதிகமாகவே காணப்படுகிறது.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும் நிலைமை சீரடையவில்லை. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆவலில் அனகாபுத்தூர் பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story