விவசாய கடன் தள்ளுபடி இல்லை மதுபானம், லாட்டரி மீது கூடுதல் வரி விதிப்பு ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டப்படும்


விவசாய கடன் தள்ளுபடி இல்லை மதுபானம், லாட்டரி மீது கூடுதல் வரி விதிப்பு ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டப்படும்
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 3:42 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுபானம், லாட்டரி மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுபானம், லாட்டரி மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 6-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் 2017-2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

விவசாய கடன் விவகாரம்


நிதி இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி சுதீர் முங்கண்டிவார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது முதல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், அவர்களுடன் சேர்ந்து ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனாவும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சட்டசபை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இதனால் பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்றி காட்டுவோம் என்று பட்ஜெட்டில் சூளுரை விடுக்கப்பட்டது.

மேலும் இது விவசாயத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் தனது உரையில் அறிவித்தார். குறிப்பாக நீர்ப்பாசன திட்டத்துக்கு மட்டும் ரூ.8 ஆயிரத்து 233 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அமளிக்கு மத்தியில்...


பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படாததால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களின் கூச்சல்-குழப்பத்துக்கு மத்தியில் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் இடம் பெற்ற மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வீடுகள்

* வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க அரசு உறுதிபூண்டு உள்ளது. பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக 55 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். ராமாயி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படும் இந்த திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தின் கீழ் நகர் மற்றும் டவுன் புறங்களில் உள்ள ஏழைகளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இரு திட்டங்களின் கீழும் ஏழைகளுக்கு 3 லட்சத்து 5 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

கூடுதல் வரி

* உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் மீதான மதிப்பு கூட்டு வரி 23.08 சதவீதத்தில் இருந்து 25.93 சதவீதமாக உயர்வு. இதனால் மதுபானங்களின் விலை அதிகரிக்கும்.

* வாராந்திர லாட்டரி சீட்டுகளுக்கான வரி ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

* மாநிலம் முழுவதும் உள்ள தொழில் பயிற்சி பள்ளிகளை(ஐ.டி.ஐ.) மேம்படுத்த ரூ.99 கோடி ஒதுக்கீடு.

* திறமையான கொத்தனார்களை உருவாக்க கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கட்டிட தொழிலாளிகளுக்கு பயிற்சி.

* கிராமப்புற கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க 349 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள்.

* செம்மறி ஆட்டு மந்தைகள் அமைக்க 75 சதவீதம் மானியம்.

* தமிழகத்தில் உள்ளது போல சிந்துதுர்க்கில் ரூ.9.31 கோடி செலவில் நண்டு குஞ்சு பொறிப்பகம், இறால் குஞ்சு பொறிப்பகம் மேம்படுத்தப்படும்.

* மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு துறையுடன் இணைந்து சந்திராப்பூரில் ரூ.200 கோடி செலவில் ராணுவப்பள்ளி.

* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடமில்லா மராட்டியத்தை உருவாக்க ரூ.545.66 கோடி ஒதுக்கீடு.

* ரூ.43 கோடி செலவில் புற்று நோயை கண்டறியும் மமோகிராபி எந்திரங்கள் மற்றும் அது தொடர்பான மருத்துவ உபகரணங்கள் 253 மருத்துவ கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வாங்கப்பட உள்ளன.

* 31 ஆஸ்பத்திரிகளில் ரூ.54 கோடி செலவில் சி.டி. ஸ்கேன் எந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.

* 2017, 18, 19 ஆகிய 3 ஆண்டுகளில் 50 கோடி மரக்கன்று நடப்பட உள்ளன.

* சுற்றுலா தலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.174 கோடி ஒதுக்கீடு.

* மராத்தி மொழி வளர்ச்சிக்கு ரூ.17.32 கோடி ஒதுக்கீடு.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.

Next Story