அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் என அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்தார்.
பாகூர்
புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் 75–வது ஆண்டு பவள விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளித் துணை ஆய்வாளர் குமார் (வட்டம்–3) தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். மாணவி வெங்கட்ராகவி ஆண்டறிக்கை வாசித்தார். முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன் சிறப்புரையாற்றினார்.
விழாவில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது;–
“தற்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாகி வருகிறது. இதற்கு காரணம் அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடத்தப்படுகிறது. எனவே தனியார் பள்ளியை விட ஒரு படி மேலே தற்போது அரசு பள்ளி திகழ்ந்து வருகிறது. இந்த அரசு தொடக்கப்பள்ளியில் தான் நான் ஆரம்ப காலத்தில் பயின்றேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இது தவிர இந்த பள்ளியில் பயின்ற பல பேர் அரசு துறைகளில் பணியாற்றுகின்றனர். நான் படித்த பள்ளியில் நடைபெறும் பவள விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. எனவே அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க அனைவரும் முன்வர வேண்டும்.“ என பேசினார்.
விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது;–
“அரசியல், பொறியியல், அறிவியல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான முறையில் பணியாற்றி வருபவர்கள் பெரும்பாலானோர் அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியானது பல்வேறு அதிகாரிகளை உருவாக்கியதாகும். தனியார் பள்ளிகளில் நடைபெறுவது போன்று மாதம் தோறும் அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறையாவது பெற்றோர்–ஆசிரியர் கூட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடத்திட வேண்டும். இந்த பள்ளியில் தற்போது 222 மாணவ–மாணவியர்கள் பயிலுவதாக தெரிவித்தனர். பெற்றோர்–ஆசிரியர் கூட்டம் நடத்தும் போது அனைத்து பெற்றோர்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது பிள்ளைகளில் கல்வியை குறித்து கேட்டறிய வேண்டும். வீட்டில் குடிபோதையிலும், குடும்ப பிரச்சனை காரணமாகவும் குழந்தைகளின் முன்பு சண்டை போடக்கூடாது. ஏனெனில் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்படும்.“
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.