குடுவையாறில் ரசாயன கழிவுகள் கலப்பதாக புகார்: கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்


குடுவையாறில் ரசாயன கழிவுகள் கலப்பதாக புகார்: கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

குடுவையாறில் ரசாயன கழிவுகள் கலப்பதாக புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளின் மெத்தனபோக்கை கண்டித்து உறுவையாறு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீன்கள் செத்து மிதந்தன

வில்லியனூர்

குடுவையாறில் ரசாயன கழிவுகள் கலப்பதாக புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளின் மெத்தனபோக்கை கண்டித்து உறுவையாறு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீன்கள் செத்து மிதந்தன

புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த உறுவையாறு கிராமத்தில் குடுவையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, தண்ணீர் தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளும் தடுப்பணையில் தண்ணீர் குடிக்கின்றன.

இந்நிலையில் கடந்த 13–ந் தேதி குடுவையாறு தடுப்பணையில் திடீரென்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடுவையாறு தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசியது.

மீன்கள் செத்து மிதந்ததற்கு ‘வில்லியனூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் குடுவையாற்றில் கொட்டப்படுவதே காரணம், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதிகாரிகள் அலட்சியம்

இதற்கிடையில் நேற்று முன்தினம் மதியம் உறுவையாறு பகுதியை சேர்ந்த சுப்புராயன், ஏழுமலை ஆகியோரின் பசு மாடுகள் குடுவையாறு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது மாசுபட்ட தண்ணீரை குடித்த 2 மாடுகள் மயங்கி விழுந்தன. இதை பார்த்த மாட்டின் உரிமையாளர்கள் விரைந்து வந்து அவற்றை காப்பாற்ற முயன்றனர். ஆனால் 2 மாடுகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தது.

மாடுகள் இறந்தது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘மீன்கள் செத்து மிதந்து, மாடுகள் இறந்தது பற்றி உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளும் சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த உயிரிழப்பு நடந்திருக்கிறது. இதற்கு புதுவை அரசு பொறுப்பேற்று நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் குடுவையாற்றில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

சாலை மறியல்

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் உறுவையாறு 4 முனை சந்திப்பில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோர்க்காடு மற்றும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் குடுவையாற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டதா? என்பதை அறிய குடுவையாறு தண்ணீரை பரிசோதனைக்காக கோரிமேட்டில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Next Story