போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் நாளை நேரில் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் நாளை நேரில் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 4:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்யாததால் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சி.சி.பி. வழக்குகள்

கடந்த 2016–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு ஒன்றின் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில், மத்திய குற்றப்பிரிவில் (சி.சி.பி.) 2011–ம் ஆண்டு வரை பல வழக்குகளில் விசாரணை முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே அந்த வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை ஐகோர்ட்டுக்கு அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். மேலும், நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்கு விசாரணையை 2 மாதங்களில் முடிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் அவர் ஆணை பிறப்பித்தார்.

அறிக்கை அனுப்ப வேண்டும்

மேலும், அந்த வழக்குகளின் நிலை குறித்தும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் ஐகோர்ட்டின் தலைமை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி, நான்கு மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் ஐகோர்ட்டில் போலீஸ் கமி‌ஷனர் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆஜராக உத்தரவு

ஐகோர்ட்டு வழங்கியிருந்த இந்த காலஅவகாசம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்தது. இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக நாளை (20–ந் தேதி) நீதிபதி வைத்தியநாதன் முன்பு ஆஜராக வேண்டும் என்று வழக்குகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோர்ட்டு அவமதிப்பு தொடர்பாக மற்றொரு வழக்கில் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் 22–ந் தேதி அன்று ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story