இந்தியா- பாகிஸ்தான் பரிதவிக்க வைத்த ஒரு காதல் கதை


இந்தியா- பாகிஸ்தான் பரிதவிக்க வைத்த ஒரு காதல் கதை
x
தினத்தந்தி 19 March 2017 3:29 PM IST (Updated: 19 March 2017 3:28 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவள், மரியம். இந்தியாவை சேர்ந்தவர், நவ்ஷத்.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவள், மரியம். இந்தியாவை சேர்ந்தவர், நவ்ஷத். இருவரும் சந்தித்து ஸ்காட்லாந்தில். அங்கு அவர்கள் சேர்ந்து ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வி பயின்றபோது, காதல் வந்துவிட்டது. இரண்டு வருடங்கள் தீவிரமாக காதலித்தார்கள். பின்பு திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் இணைந்தார்கள்.

மகிழ்ச்சியாக மணவாழ்க்கை தொடர்ந்துகொண்டிருந்தபோது ஒரு நாள், ‘நான் என் தாய்நாட்டிற்கு செல்ல வேண்டும். அங்கு என் பெற்றோர் கேரளாவில் வசிக்கிறார்கள். அவர்களிடம் நமக்கு கல்யாணம் நடந்ததைக்கூறி அவர்களது அனுமதியைப் பெறவேண்டும்’ என்று அழுத கண்களோடு மரியத்திடம் இருந்து விடைபெற்று, நவ்ஷத் இந்தியாவுக்கு விமானம் ஏறியிருக் கிறார்.

“அவர் சென்று மாதங்கள் பல கடந்த பின்பும் எந்த பதிலும் இல்லை. அவர் என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை. எனக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தேன். சில மலையாள நண்பர்களிடமும் கேட்டேன். எந்த விவரமும் தெரியவில்லை. ஒரு நாள் முகநூலில் பார்த்தபோது அவர் என்னை ‘ப்ளாக்’ செய்து விலக்கியிருப்பது தெரிந்தது.

மிகுந்த வேதனையடைந்தேன். யாரிடமும் கூறமுடிய வில்லை. எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் சிலரே இருந்தார்கள். அவர் களுக்கும் நவ்ஷாத் என்ற பெயரும், சாவக்காடு என்ற அவரது ஊர் பெயரும் மட்டுமே தெரியும். அதற்கு மேல் எந்த விவரத்தையும் சேகரிக்க முடியவில்லை. கடைசியாக தூதரகம் வழியாக விசாரித்தேன். அப்போது அத்தாட்சியாக அவரை பற்றி அளிக்க என்னிடம் எதுவும் இல்லை. அவர் செலுத்திய அன்பைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை.

நம் மீது அன்பு செலுத்திய ஒருவர் காணாமல் போய்விட்டால் அவரை நம்மால் மறந்துவிட முடியுமா? அவரை பற்றிய நினைவுதான் மீண்டும் மீண்டும் வந்தது. அழுது அழுது என் கண்கள் வற்றிவிட்டன. அவர் என்னை ஏன் மறந்தார்? என்று என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை..” என்று கண்கள் கலங்க கூறும் மரியம், தனது முயற்சிகளை கைவிடவே இல்லை.

இணைய வழி தொடர்பு மூலம் தனது நிலையை கூறி, கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு அமைப்பு தனக்கு உதவினால் நல்லது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறாள். அப்போது கூகுள் மூலமாக சினேகிதா என்ற அமைப்பு பற்றி தெரியவந்திருக்கிறது. அதில் காணப்பட்ட தொலைபேசி எண்ணில் மரியம் தொடர்பு கொண்டிருக்கிறாள்.

போன் தொடர்பில் கிடைத்த பெண்ணிடம் அரை மணி நேரம் அழுதுவிட்டு, ஒருசில வார்த்தைகள் பேசியிருக்கிறாள். அப்போது ‘சாவக்காட்டுக்கார ஆண் ஒருவர் தன்னை ஏமாற்றிவிட்டார்’ என்பது மட்டும் எதிர்முனையில் இருந்த பெண்ணுக்கு புரிந்திருக் கிறது.

போனில் தொடர்புகொண்டதைவைத்து மரியத்தின் எண் தெரிந்துவிட்டதால் அந்த எண்ணை, வக்கீல் சுதா ஹரித்துவார் என்பவரிடம் கொடுத்து விவரத்தை கூறியிருக்கிறார், சினேகிதாவை சேர்ந்த பெண். உடனே வக்கீல் சுதா, மரியத்தை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

“நான் மரியத்தின் அழுகுரலை ஒரு வக்கீலாக கேட்கவில்லை. இன்னொரு பெண்ணாக கேட்டேன். அதை தொடந்து மரியம் என்னை எப்போதும் போனில் அழைப்பார். அழுவார். தகவல்களை சொல்வார். இந்த நிலை எனது அன்றாட பணிகளைகூட பாதித்தது. அவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்தது. பின்பு நான் வக்கீல் முகமது இஸ்மாயிலை சந்தித்து பேசி, அவரோடு சேர்ந்து அந்த வழக்கை கையாளத் தொடங்கினேன்” என்றார்.

வக்கீல் சுதாவை காண மரியம் ஸ்காட்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு விமானம் ஏற தயாரானார். ஆனால் அவளது பெற்றோர் அனுமதிக்கவில்லை. ஒருநாள் பெற்றோருக்கு தெரியாமலே மரியம் இந்தியாவுக்கு வந்துவிட்டாள்.

“மரியம் இந்தியாவிற்கு வரும் முன்பே நாங்கள் நவ்ஷத்தின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றோம். விவரத்தை சொன்னோம். ஆனால் எந்த விளைவும் ஏற்படவில்லை. மரியம் வந்த பின்பு ஏதாவது மாற்றம் நிகழும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவள் வருவது தெரிந்ததும் நவ்ஷத் வெளிநாட்டிற்கு பறந்துவிட்டார்.

மரியம் வந்ததும் அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் சென்றோம். அவள் காதலித்ததையும், கல்யாணம் செய்துகொண்டதையும், உயிருக்கு உயிராக அன்பு செலுத்தியதையும் சொன்னாள். அந்த ஊரை சேர்ந்தவர்களும் நவ்ஷத் குடும்பத்தாரிடம் எடுத்துச்சொன்னார்கள். அப்போது அவர்கள், நவ்ஷத் வந்ததும் இது பற்றி பேசலாம் என்றார்கள்.

அவரும் வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்தார். இருவரும் சந்தித்தார்கள். மத்தியஸ்தர்களும், அந்த ஊரைச் சேர்ந்தவர்களும் உடனிருந்தார்கள். எல்லோர் முன்னிலையிலும் நவ்ஷத், ‘நான் மரியத்தை மனைவியாக கருதவில்லை. இனி நான் அவளை பார்க்கவும் விரும்பவில்லை’ என்றார். அதை கேட்டு மரியம் தலைசுற்றி விழுந்தாள். அதை கண்டுகொள்ளாமலே நவ்ஷத் காரில் ஏறி போய்விட்டார்” என்று வருத்தத்தோடு சொல்கிறார், வக்கீல் சுதா.

பின்பு வழக்கை மரியத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடத்தி வந்தார்கள். அப்போது மரியத்தின் விசா காலம் முடிந்துவிட்டது. அவள் மீண்டும் ஸ்காட்லாந்து சென்றாள். ‘அதோடு இந்த காதல் கதை முற்றுப்பெற்று விடும். மரியம் திரும்பி வரமாட்டாள்’ என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், சட்டப் போராட்டத்துக்கு தயாரான பெண்ணாக மீண்டும் மரியம் வந்து சேர்ந்தாள். அதற்குள் நவ்ஷத் இன்னொரு திருமணம் செய்துகொண்டார்.

“மரியம் திரும்பி வந்ததும் நவ்ஷத் யாரை திருமணம் செய்திருக்கிறார்? என்ற தகவலை அறிய விரும்பினாள். ஆனால் அந்த தகவலை பெற முடியவில்லை. அதற்காக இரண்டு தனியார் துப்பறியும் நிறுவனங்களை அணுகியும் தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் மரியத்தின் மீது அன்புகொண்ட அந்த பகுதி பெண்களில் சிலர் முயற்சி செய்து, தேவையான தகவல்களை எப்படியோ தேடிப்பிடித்துவிட்டார்கள்.

அந்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததும், ‘மரியம், நவ்ஷத் வீட்டிற்கு சென்று அங்கே வசிக்கலாம்’ என்று உத்தரவிட்டது. உத்தரவோடு அங்கு சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. எல்லோரும் அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். ஊர் மக்கள் கூடினார்கள். அக்கம்பக்கத்தினர் மரியம் பருக தண்ணீர் கொடுத்தார்கள். அவள் அமர இருக்கை வழங்கினார்கள். பத்திரிகையாளர் களும் கூடினார்கள். மரியம், ‘நவ்ஷத்தை நான் ஒரே ஒரு முறை பார்த்தால் போதும்’ என்று உறுதியோடு உட்கார்ந்துவிட்டாள்.

அன்று இரவு திடீரென்று மரியம் அழத்தொடங்கினாள். அவள் கையில் அப்போது செல்போன் இருந்தது. அதை பார்த்தபடியே அழுதாள். எப்போதோ ஒருமுறை அவளுக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து மிஸ்டுகால் வந்திருக்கிறது. அது நவ்ஷத் நம்பர் என நினைத்து அவள் பதிவு செய்துவைத்திருக்கிறாள். அதில் உள்ள ‘புரோபைல் பிக்சர்’ அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அதில் அன்று ஒரு பெண்ணின் கையை, இன்னொரு ஆணின் கை பற்றிப் பிடித்திருப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்திருக்கிறது. அது நவ்ஷத்தின் கைதான் என்பதை அறிந்துதான் மரியம் அழுதிருக்கிறாள். உடனே அவள், அந்த நம்பருக்கு போன் செய்தாள். எதிர்முனையில் ஒரு பெண் பேச, மரியம் அழுதாள். ‘நன்றாக அழு.. ஆனால் நவ்ஷத்தை நினைத்து அழும் கடைசி அழுகையாக இருக்கவேண்டும்’ என்றோம். பின்பு அவரது குடும்பத்தினரிடம் பேசினோம். மரியத்திற்கு ஒரு பெரிய தொகை இழப்பீடாக கிடைத்தது” என்கிறார், வக்கீல் சுதா.

அந்த பகுதி மக்கள் பலரும் மரியத்தின் நாடு கடந்த காதல் போராட்டத்தையும், சட்டப் போராட்டத்துக்கு அவள் துணைநின்றதையும் பாராட்டினார்கள். தோளில் தட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மரியத்திற்கு நவ்ஷத் கிடைக்காவிட்டாலும், நிறைய தோழிகள் கேரளாவில் கிடைத்துவிட்டார்கள். அவர்களோடு பேசிய, பொழுது போக்கிய நினைவுகளோடு அவள் ஸ்காட்லாந்துக்கு போய்விட்டாள். 

Next Story