திருப்புவனம் டாஸ்மாக் கடையில் ரூ.500 நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மதுபாட்டில் வாங்கிய 7 பேர் சிக்கினர்
திருப்புவனத்தில் ரூ.500 நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மதுபாட்டில் வாங்கி 7 பேர் சிக்கினர்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சந்தை பஸ் நிறுத்தம் அருகே மதுரை–மண்டபம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் 7 பேர் மதுபாட்டில் வாங்குவதற்காக வந்தனர். அவர்கள் ரூ.500 கொடுத்து மதுபாட்டில் வாங்கி சென்றனர். பின்னர் டாஸ்மாக் கடையில் கணக்குகளை சரிபார்த்தபோது, ரூ.500 நோட்டு ஒன்று கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது போன்று இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த கடையின் ஊழியர் மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார். அவர் ரூ.500 நோட்டை சோதித்து பார்த்தபோது, அந்த ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வவிநாயகம், இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.
சிக்கினர்இது குறித்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அப்போது திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த கார்மேகம்(வயது 39), ராமநாதன்(61), பொன் இருளன்(60), ராமர்(55), பிச்சை(61), பாலு(50), மற்றொரு பிச்சை(63) ஆகிய 7 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தார்.
விசாரணையில், இவர்கள் 7 பேரே டாஸ்மாக் கடையில் ரூ.500 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மதுபாட்டில் வாங்கியது தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.500 கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் 5–ஐ போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைப்பற்றினார்.