இந்திராகாந்தி நூற்றாண்டையொட்டி கடலூரில், மகளிர் காங்கிரஸ் மாநாடு நடிகைகள் கே.ஆர்.விஜயா, மீனா விருது பெற்றனர்
இந்திராகாந்தி நூற்றாண்டையொட்டி கடலூரில் மகளிர் மாநாடு நடந்தது.
கடலூர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி நூற்றாண்டையொட்டி மாநில மகளிர் மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஏற்றி வைத்து, சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
மாநாட்டுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா தலைமை தாங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வக்கீல் சந்திரசேகரன், தொழிலதிபர் மணிரத்தினம், சாய்லட்சுமி, கரோலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.
மாநாட்டை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தனித்து போட்டியிட வேண்டும்இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார். விவசாயிகள், நெசவாளர்கள், சிறுபான்மை மக்கள், பின்தங்கிய மக்களுக்காக தனித்தனி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். வங்கிகளை தேசியமயமாக்கினார்.
காமராஜர், மக்களை படிக்க வேண்டும் என்றார். ஆனால் இந்த அரசு குடிக்க வேண்டும் என்று சொல்கிறது. காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியவில்லை. தனித்து போட்டியிட்டிருந்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கும்.
1969–ம் ஆண்டுக்கு பிறகு, குறிப்பாக பல்வேறு காலகட்டங்களில் தி.மு.க, அ.தி.மு.க.வுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சிக்கு வருவதை வேடிக்கை பார்த்து வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும். ஆகவே வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர் தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலையை காங்கிரஸ் முன்னெடுத்து செல்ல வேண்டும். அப்படி அறிவித்து செயல்பட்டால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். சிரமம் என்றாலும் இது தான் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டனின் விருப்பமாகும்.
இவ்வாறு கே.வி.தங்கபாலு பேசினார்.
நடிகைகளுக்கு விருதுஅதையடுத்து மகளிர் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றத்தை புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இதில் சுசிலா கோபாலகிருஷ்ணன், செண்பகவள்ளி, வனிதா, சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் கலந்து கொண்டு இந்திராகாந்தி பற்றி பேசினர்.
தொடர்ந்து திரைப்பட நடிகைகள் கே.ஆர்.விஜயா, மீனா ஆகியோருக்கு இந்திராகாந்தி விருது மற்றும் தங்கப்பதக்கத்தை புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி வழங்கி பேசினார். இதில் சின்னத்திரை நடிகைகளும் கவுரவிக்கப்பட்டனர்.
மாலை 3 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. மாநாட்டில் குலாம்மொய்தீன், மீனவர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை தலைவர்கள் கலை.விஜயகுமார், ரெங்கமணி, வேலுச்சாமி, பொதுச்செயலாளர்கள் வி.ஜி. சரவணன், முருகன், செயலாளர்கள் கிஷோர்குமார், காமராஜ், விவசாய பிரிவு தலைவர் தேவநாதன், பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், தொழிலாளர் பிரிவு தலைவர் ராமராஜ், வக்கீல்கள் கலைச்செல்வன், கலையரசன், உஷா, சகிலா, வட்டார தலைவர்கள் ரமேஷ்ரெட்டியார், ராமச்சந்திரன், சிவா, சீத்தாராமன், துணை தலைவர் ராஜாராமன், முன்னாள் வட்டார தலைவர் கலியமூர்த்தி, மூத்த நிர்வாகிகள் பாண்டுரங்கன், ஆறுமுகம், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.