சேலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபாட்டில்களுக்கு பாடை கட்டி பா.ம.க.வினர் போராட்டம்
சேலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபாட்டில்களுக்கு பாடை கட்டி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.
சூரமங்கலம்,
சேலம் இரும்பாலை அருகே மாரமங்கலத்துபட்டியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையினால் பொதுமக்கள் உள்பட பலருக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் இந்த கடையை கீரைபாப்பம்பாடிக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்ததாக தெரிகிறது.
இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள் தலைமையில் பசுமை தாயக மாநில துணை அமைப்பாளர் சத்திரியசேகர், மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் சாம்ராஜ் உள்பட கட்சியினர் ஏராளமானவர்கள் நேற்று மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திரண்டு வந்தனர்.
பாடை கட்டிஅப்போது சிலர் மதுபாட்டில்களுக்கு மாலையிட்டு பாடை கட்டி தூக்கி கொண்டு வந்தனர். இதையொட்டி ஏற்கனவே டாஸ்மாக் கடை முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக் ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடை அருகே வந்தபோது போலீசார் பா.ம.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக அங்கு போராட்டம் நடத்திய பா.ம.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள், இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றும், மேலும் இங்கிருந்து டாஸ்மாக் கடையை கீரைபாப்பம்பாடிக்கு மாற்றக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீசார் அவர்களிடம், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அமைக்க விட மாட்டோம்இதுகுறித்து பா.ம.க. மாநில துணை பொதுசெயலாளர் இரா.அருள் கூறும்போது, ‘மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அதிகாரிகள் விரைவில் அகற்றவேண்டும். மேலும் இந்த கடையை மாற்றி கீரைபாப்பம்பாடி கிராமத்தில் அமைக்க விடமாட்டோம். மாவட்டம் முழுவதும் 206 டாஸ்மாக் கடைகள் விதிகளை மீறி கோவில், பள்ளி, ஆஸ்பத்திரி, பஸ்நிலையம் அருகே உள்ளது. இந்த கடைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்றார்.