குடிமராமத்து திட்டத்தின் கீழ் 70 கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடக்கம் கலெக்டர் வீரராகவராவ் பேச்சு
குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 70 கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.
மதுரை,
குறைத்தீர்க்கும் கூட்டம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதி குறைகளை விளக்கி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
வைகை அணையின் நீர்மட்டம் படுபாதாளத்திற்கு போய்விட்டது. பொதுமக்களுக்கு அங்கிருந்து நீர் எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. ஆனால் வைகை அணை அருகில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 16 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். கொடிக்குளத்தில் 36 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு 80 அடியில் நீர் கிடைப்பதால், கால் நடை தீவன புல் வளர்க்கலாம்.
வறட்சியால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தள்ளுபடி அறிவிப்புக்கு முன்னதாகவே சில விவசாயிகள் தங்கள் கடனை அடைத்து உள்ளனர். அவர்களுக்கு அந்த தொகையை உடனடியாக திருப்பி தர வேண்டும். உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
தீவன புல்இதற்கு பதிலளித்து கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:–
வைகை அணையில் இருந்து குடிநீருக்கு நீர் எடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படும். குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 70 கண்மாய்களை தூர்வாரும் பணிகள் முதல்கட்டமாக தொடங்கி உள்ளது. இந்த பணிகள் கிராம மக்கள் கொண்ட குழு அமைத்து செயல்படுத்தப்படும். குழு அமைப்பதில் கிராம மக்களிடையே பிரச்சினை ஏற்பட்டால், அந்த கண்மாயை 2–ம் கட்டமாக எடுத்து கொள்ளப்படும். கொடிக்குளத்தில் தீவன புல் வளர்ப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் திட்டத்தின் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
சீமை கருவேல மரங்கள்மதுரை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 89 ஆயிரத்து 730 விவசாயிகளுக்கு ரூ.32 கோடியே 72 லட்சம் நிவாரணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 51 ஆயிரத்து 744 விவசாயிகளுக்கு 24 கோடியே 65 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு வழங்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் எக்டர் நிலப்பரப்பு உள்ளது. அதில் 1 லட்சத்து 75 ஆயிரம் எக்டரில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அதில் 50 ஆயிரம் எக்டர் அரசு நிலங்கள். மற்றவை தனியாருக்கு சொந்தமான நிலங்கள். தற்போது வரை 4 ஆயிரத்து 609 எக்டரில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.