தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள்
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராமம் உள்ளது. இங்கு 500–க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் போதிய மழை இல்லாததால் ஏற்பட்ட வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக ஏமம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் போதிய தண்ணீரின்றி அவதியடைந்து வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தடையின்றி தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கிராம மக்கள் போராட்டம்இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று காலை 9 மணிக்கு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு தினந்தோறும் போதிய அளவு குடிநீரை வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி உளுந்தூர்பேட்டையில் இருந்து ஏமத்துக்கு வந்த அரசு டவுன் பஸ்சை திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தைஇதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்–இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஓரிரு நாட்களுக்குள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் காலை 10 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து அந்த அரசு பஸ் புறப்பட்டு சென்றது.