மங்களூருவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.69½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் கேரள வாலிபர் கைது
மங்களூருவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.69½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மங்களூரு,
மங்களூருவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.69½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பணத்தை கடத்த முயன்ற கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.69½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த வாலிபரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த வாலிபரின் பேக்கில் சோதனை நடத்தினர். அப்போது பேக்கில் வெளிநாட்டு பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். இந்த வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.69½ லட்சம் ஆகும்.
கைதுஇதனை தொடர்ந்து அவரிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஷ்வர் பகுதியை சேர்ந்த முகமது அஸ்கர்(வயது 35) என்பதும், அவர் மங்களூருவில் இருந்து துபாய்க்கு வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை சுங்கவரித்துறை அதிகாரிகள் பிடித்து பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பஜ்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான முகமது அஸ்கரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.