கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்
சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை
சார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜா விமானம் கோவைக்கு வந்தது. அந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தன். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த சூட்கேஸ்களை சோதனை செய்ததில் ஏராளமான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த நஜீம்(வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கடத்தி வந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டது. சுங்க இலாகா அதிகாரிகள் நஜீமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் கூறியதாவது:–
அனுமதி கிடையாதுவெளிநாட்டிலிருந்து வரும் ஒரு பயணி 200 சிகரெட்டுகளை கொண்டு வர அனுமதி உண்டு. அதற்கு மேல் கொண்டு வந்தால் அதற்கு 145 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். சார்ஜாவிலிருந்து வந்த நஜீம் என்ற பயணி கடத்தி வந்த 90 பாக்கெட்டுகளில் 18 ஆயிரம் சிகரெட்டுகள் இருந்தன. அந்த அளவுக்கு சிககெரட் பாக்கெட்டுகள் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது. இதனால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
நஜீம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து விமானத்தில் சார்ஜா சென்றுள்ளார். அவர் செல்லும் போது கேரள வெற்றிலையை கொண்டு சென்றார். அரேபிய நாடுகளில் வெற்றிலைக்கு கடும் கிராக்கி. சார்ஜாவில் நல்ல விலைக்கு வெற்றிலையை விற்ற பின்னர் அங்கிருந்து சிகரெட், சோப்பு மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற அழகு சாதனங்களை வாங்கியுள்ளர்.
145 சதவீதம் அபராதம்வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் ஒரு நபர் 4 அல்லது 5 சோப்பு, 3 அல்லது 4 வாசனை ஸ்பிரேயர்கள் கொண்டு வர அனுமதி உண்டு. தனி நபரின் உபயோகத்துக்கு இத்தகைய பொருட்களை கொண்டு வரலாம். ஆனால் வணிக நோக்கத்தில் எந்த பொருளை கொண்டு வந்தாலும் அதற்கு வரி மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
அழகு சாதன பொருட்களை நஜீம் அதிகமாக கொண்டு வந்துள்ளார். அவற்றிற்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவரை விடுவித்து விட்டோம். ஆனால் அவர் கொண்டு வந்த 18 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் ஆகும். இதற்கு 145 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அந்த தொகையை அவர் செலுத்தினால் சிகரெட் பாக்கெட்டுகள் திருப்பி கொடுக்கப்படும். ஆனால் அவ்வளவு தொகை செலுத்தி சிககெரட்டை எடுத்து சென்று விற்றால் அவருக்கு கட்டுப்படியாகாது. எனவே அவர் சிகரெட் பாக்கெட்டுகளை வாங்க வர மாட்டார் என்றே கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவை விமான நிலையத்தில் அடுத்தடுத்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.