10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிப்பு


10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 20 March 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிப்பு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயத்தை தற்போது பெரும்பாலானவர்கள் வாங்க மறுக்கிறார்கள். இதற்கான பொதுவான காரணம் அதை கையாள்வதில் உள்ள சிரமம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மக்களால் அதிகம் புழக்கத்தில் உள்ளது 10 ரூபாய் நோட்டுகள் தான். புதிதாக அச்சிடப்படும் 10 ரூபாய் நோட்டின் ஆயுட்காலம் 10 மாதங்கள் தான். அதன்பின்னர் அந்த நோட்டு கிழிந்து உபயோகப்படுத்தப்படாத நிலைக்கு சென்று விடும். இதனால் அடிக்கடி புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட வேண்டிய கட்டாயத்துக்கு ரிசர்வ் வங்கி தள்ளப்படுகிறது. இதை தவிர்ப்ப தற்காக தான் 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்படுகின்றன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் 10 ரூபாய் நோட்டை பிளாஸ்டிக்கில் அச்சிட்டால் அதை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

புரளி கிளம்புவது எப்படி?

ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்களை வங்கிகள், பஸ் கண்டக்டர்கள், கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களில் போலி நாணயங்கள் ஊடுருவி விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டும் பொய்யானது என்று வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 10 ரூபாய் நாணயத்தை எண்ணுவதில் உள்ள சிரமம், அதை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாப்பது கஷ்டம், எடை அதிகம் உள்ள நாணயத்தை கண்டக் டர்கள் தங்கள் தோள் பையில் வைத்து சுமப்பதில் உள்ள சிரமம், பொதுமக்கள் அந்த நாணயத்தை பாக்கெட்டில் வைத்திருப்பதில் உள்ள நடைமுறை பிரச்சினைகள் போன்ற காரணங்களால் தான் அந்த நாணயத்தை யாரும் வாங்க மறுக்கிறார்களே தவிர அதில் போலிகள் ஊடுருவி விட்டது என்பதற்காக இல்லை.

பஸ்களில் செல்லும் ஒரு பயணி தான் கொடுக்கும் 10 ரூபாய் நாணயத்தை கண்டக்டர் வாங்க மறுத்தால் அந்த பயணியின் மனதில் இந்த நாணயம் செல்லாது என்ற எண்ணம் உருவாகிறது. அரசு பஸ்சிலேயே நாணயத்தை வாங்க மறுப்பதால் அது செல்லாததா? அல்லது போலி நாணயங்களா? என்ற எண்ணமும் பயணிகளின் மனதில் எழுகிறது. இந்த எண்ணம் அனைவரின் மனதிலும் எழும்போது 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற புரளி கிளம்புகிறது. இதுபோன்று அனைத்து கடைகளிலும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க தயக்கம் காட்டப்படுகிறது. இத்தகைய காரணங்களால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தகவல் பொதுமக்களிடையே பரவி வருகிறது. இதை தடுக்க வங்கி அதிகாரிகள், வணி கர்கள், மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரியான தீர்வு

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து அதிகாரிகள் தங்கள் பஸ் கண்டக்டர்களிடமும், வங்கி உயர் அதிகாரிகள் தங்கள் ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டாலும் அதை வாங்க மறுப்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினையில் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 ரூபாய் நாணயத்தை ஏன் வாங்க மறுக்கிறார்கள் என்று கேட்டால் அதற்கான காரணம் குறித்து ஒவ்வொரு துறையும் மற்றொரு துறையை குறை சொல்வதை விட்டு விட்டு எடை குறைவான 10 ரூபாய் நாணயங்களை தயாரிப்பது ஒன்று தான் இதற்கு சரியான தீர்வாகும். இந்த பிரச்சினையில் ரிசர்வ் வங்கி தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எந்திரம்

10 ரூபாய் நாணயம் பாதுகாப்பானது. அதன் பயன்பாடு பல ஆண்டுகளுக்கு இருக்கும். அது செல்லும் என்பதை பொதுமக்கள் உணரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாணயங்களை வங்கியில் வாங்குவதற்கு தனியாக கவுண்ட்டர் அமைக்க வேண்டும். லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டு களை எண்ணுவதற்கு எந்திரம் இருப்பது போன்று நாணயங்களை பொதுமக்கள் அதிக அளவில் கொண்டு வந்தால் அதை எண்ணுவதற்கு தனியாக எந்திரங்களை வங்கியில் வைக்க வேண்டும்.

வங்கிகளில் சில்லறை வினியோகம் செய்வதற்கு தனியாக எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த எந்திரத்தில் 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் நோட்டை சொருகினால் சில்லறை நாணயங்கள் வந்து விழும். அது போல வங்கிகளில் வாடிக்கையாளர் கொண்டு வரும் 10 ரூபாய் நாணயங்களை எண்ணுவதற்கு தனி எந்திரம் வைத்தால் அதன் மூலம் வங்கி ஊழியர்கள் எண்ணி பெற்றுக் கொள்வார்கள். இதில் அவர்களுக்கு சிரமம் இருக்காது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் 10 ரூபாய் நாணயங்களை வங்கியில் பெற்றுக் கொள்ள வழி ஏற்படும்.

பஸ் கண்டக்டர்கள் வாங்க மறுப்பது ஏன்? தூக்கி சுமப்பது கஷ்டம்; எண்ணி கொடுப்பது சிரமம்

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது ஏன் என்பது குறித்து கோவை அரசு பஸ் போக்குவரத்து கழக எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த கண்டக்டர் பெரியசாமி கூறியதாவது:–

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓடும் பஸ்களில் தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை பணம் வசூலாகிறது. அந்த பணம் முழுவதும் அப்படியே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தப்படுகிறது. 10 ரூபாய் நாணயங்களை பயணி களிடம் இருந்து கண்டக்டர்கள் வாங்கினால் தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் மதிப்பிற்கு 10 ரூபாய் நாணயங்கள் கிடைக்கும். ஏறக்குறைய 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் எண்ணிக்கை நாணயங்கள் பயணிகளிடம் இருந்து கிடைக்கும். ஒரு நாணயத்தின் எடை 20 கிராம் என்று வைத்துக் கொண்டால் 40 ஆயிரம் நாணயங்களின் எடை எவ்வளவு என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளலாம்.

2 கிலோ எடை

கோவை மண்டலத்தில் ஒரு கண்டக்டரிடம் தினமும் 100 நாணயங்கள் வந்தாலே அதன் எடை 2 கிலோவாக இருக்கும். அந்த நாணயங்களை தூக்கி சுமப்பது கஷ்டம் என்பதால் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பெரும்பாலான கண்டக்டர்கள் கூறுகிறார்கள். பயணிகளிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்கினால் அதை நாங்கள் போக்குவரத்து கழகத்தின் வசூல் பிரிவில் செலுத்தும்போது அதை வேண்டாம் என்று நிராகரிக்கிறார்கள். அதற்கு காரணம் அதை வங்கியில் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.

ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களை வங்கியில் செலுத்த சென்றால் அதை எண்ணுவதற்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். அதற்கு வங்கியில் உள்ளவர்களுக்கு நேரம் கிடையாது. இதனால் வங்கியில் உள்ளவர்களே 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வராதீர்கள் என்று கூறுவதாக சொல்லப் படுகிறது.

வாங்க மறுப்பது ஏன்?

ஒரு கண்டக்டர் 2 ஆயிரம் ரூபாய்க்கு இருநூறு 10 ரூபாய் நாணயங்களை கொண்டு சென்றால் அதை பொட்டலம் போட்டு அதன் மேல் அந்த கண்டக்டரின் பெயர் எழுதி அப்படியே தனியாக வைத்திருப் பார்கள். அதை போக்குவரத்து அலுவலக வசூல் பிரிவில் உள்ளவர்கள் கொண்டு சென்று வங்கியில் செலுத்தும்போதும் அந்த பொட்டலம் அப்படியே தனியாக இருக்கும். வங்கியில் உள்ளவர்கள் அதை எப்போது எண்ணுகிறார்களோ அதுவரை அந்த பொட்டலம் தனியாக இருக்கும்.

ஒருவேளை அந்த பொட்டலத்தில் 3 நாணயங்கள் குறைந்தால் அந்த தொகையான 30 ரூபாயை அந்த கண்டக்டர் தான் கொடுக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் தான் கண்டக்டர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

சில பயணிகள் ஒன்றிரண்டு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் அதை வாங்கிக் கொள்கிறோம். அதையே நாங்கள் திருப்பி பயணிகளிடம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள். இதற்காக நாங்கள் பயணிகளிடம் வாக்குவாதம் செய்வதில்லை. சில பயணிகளிடம் 50 ரூபாய்க்கு ஐந்து 10 ரூபாய் நாணயங்களை கொடுக்கும்போது அதை வாங்கி பாக்கெட்டில் போட்டால் அதிக எடையாக இருப்பதாக கூறி அதை வாங்க மறுக்கிறார்கள்.

இதே 10 ரூபாய் நோட்டாக இருந்தால் அது எத்தனை ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் வாங்கிக் கொள்கிறோம். பஸ்களில் கூட்டமான நேரத்தில் 10 ரூபாய் நாணயங்களை எண்ணிக் கொடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சில சமயங்களில் அதிகமாக எண்ணிக் கொடுத்து விடுவோம். அல்லது குறைவாக எண்ணி கொடுத்து விடுகிறோம். இதில் நாணயங்கள் குறைந்தால் அதையும் நாங்கள் தான் ஈடு செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலிகளுக்கு இடமில்லை: 10 ரூபாய் நாணயங்கள் பாதுகாப்பானவை

போலி நாணயங்கள் தயாரிக்க முடியுமா? என்பது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பொதுவாக ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சிடுபவர்கள் அதன் மதிப்புக்கு பல மடங்கு அதிகமாக இருந்தால் தான் அச்சிடுவார்கள். ஆனால் நாணயங்களை தயாரிப்பதில்லை. இதற்கு காரணம் நாணயங்களின் மதிப்பை விட அதை தயாரிக்கும் செலவு அதிகம் என்பதால் போலி நாணயங்களை தயாரிப்பதில்லை. ஒரு 10 ரூபாய் நாணயம் தயாரிக்க 6 ரூபாய் 50 காசுகள் செலவு ஆவதாக கூறப்படு கிறது. எனவே போலியாக 10 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற தகவலில் உண்மை இல்லை. எனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயங்கள் மிகவும் பாதுகாப்பானவை. பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. 10 ரூபாய் நாணயத்தில் போலிகளுக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்- வணிகர் சங்க மாவட்டத்தலைவர் கோரிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்டத் தலைவர் ஜி.இருதயராஜா கூறியதாவது:–

மளிகைக்கடைகளில் ஒன்றிரண்டு பேர் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் அதை கடைக்காரர்கள் வாங்கி கொள்வார்கள். ஆனால் அந்த நாணயங்களை வங்கிகளில் வாங்குவதில்லை. 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வராதீர்கள் என்று வங்கியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இதனால் சிறிய கடை முதல் பெரிய கடைக்காரர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. இதே போல கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தாலும் 10 ரூபாய் நாணயங்களை அவர்கள் வாங்குவதில்லை கடைக்காரர்கள் கொண்டு செல்லும் நாணயங்களை வங்கியில் வாங்கிக் கொண்டால் பிரச்சினையே கிடையாது. ஆனால் அதை வாங்காததால் தான் பிரச்சினை எழுகிறது.

மொத்த வியாபாரம் செய்பவர்கள் கடைக்கு தினமும் 200 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். ஒருவர் 2 நாணயம் கொடுத்தாலே தினமும் 4 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்கள் சேர்ந்து விடும். ஆனால் அதை வங்கியில் வாங்கி கொள்ளாததால் அவை அப்படியே தேங்கி விடுகிறது. இதனால் தான் 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொள்ள கடைக்காரர்கள் தயங்குகிறார்கள். நாணயங்களை வாங்கி கொள்ள வங்கிகளுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story