அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் வழங்கப்படலாம், எச்.ராஜா பேட்டி
1989–ம் ஆண்டு போல அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் வழங்கப்படலாம் கோவையில் எச்.ராஜா பேட்டி
கோவை,
1989–ம் ஆண்டு போல அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் வழங்கப்படலாம் என்று பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உத்தரபிரதேச முதல்–மந்திரிஉத்தரபிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா முதல்–மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டிலும் பாரதீய ஜனதாவின் வெற்றிக்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிராக பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்.
சென்னையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. 2004–ம் ஆண்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியது. ஆனால் தமிழக அரசு இதற்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை. லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதில் இரு ஆட்சியிலும் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அரசுகள் கவனம் செலுத்தவில்லை.
வெவ்வேறு சின்னங்கள்இரட்டை இலை சின்னத்துக்கு அ.தி.மு.க.வில் இரு அணிகள் உரிமை கொண்டாடி வருகின்றன. ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் சரியான முடிவுகளை அறிவிக்கும். 1989–ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இரு அணிகள் ஏற்பட்டு, இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டு வெவ்வேறு சின்னங்கள் வழங்கப்பட்டதை போல, இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் வழங்கப்படலாம்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் செயல்பாடுகளை எடைபோடும் தேர்தல். இந்த தேர்தலில் மக்கள் சரியான முடிவை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
விவசாயிகள் பிரச்சினைடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச உள்ளார். தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டம் தற்போது சாத்தியமில்லாத நிலையில் உள்ளது. முதலில் மாநில அளவில் நதிகளை இணைத்து அதன் பின்னர் தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பவானி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டுவதற்கு கோவையில் இருந்து மணல் செல்வது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கோவையில் பாரூக் என்பவர் மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை கண்டிக்கிறோம்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
அப்போது மாநில செயலாளர் வானதிசீனிவாசன், கோவை கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.எஸ்.செல்வக்குமார், பாரதீய ஜனதா அகில இந்திய இளைஞர் அணி துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம், தொழிற்சங்க நிர்வாகி கல்யாணசுந்தரம் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.