சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு பறவைகள் வருகை குறைந்தது


சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு பறவைகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் பறவைகள் வகை குறைந்துள்ள நிலையில் சுத்தமல்லி நீர்த்தேக்கத்தை சிறந்த தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தா.பழூர், 


அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கார்குடி அருகே ரூ.4.79 கோடி செலவில் சுத்தமல்லி நீர்த்தேக்கம் கடந்த 1983–ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஸ்ரீபுரந்தான், காசான்கோட்டை, அருள்மொழி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் இந்த நீர்த்தேக்கத்தின் கரைகள் பலமிழந்து காணப்பட்டதால் மழைக்காலங்களில் உபரிநீர் வீணாகுவதை தடுக்கும் பொருட்டும், அணையின் பாதுகாப்பு கருதியும் உலக வங்கி உதவியோடு, டி.ஆர்.ஐ.எப். திட்டத்தின் கீழ் கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி 20–ந்தேதி ரூ.14 கோடியே 50 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. அந்த பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நிறைவடைந்தது.

தூர்வாரப்படவில்லை

இந்த புனரமைப்பு பணியின்போது நீர்த்தேக்கத்தின் கரைகள் மட்டுமே பலப்படுத்தப்பட்டன. ஆனால் நீர்த்தேக்கத்தின் உட்பகுதியில் தூர்வாரும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளாக மழை சரிவர பெய்யாததால் இந்த நீர்த்தேக்கம் வறண்டு போனது.

தற்போது நீர்த்தேக்கம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் பெறப்படும் நீர்வரத்தை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

சுற்றுலா தலம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுத்தமல்லி நீர்த்தேக்கமும் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் அதன் மதிப்பை இழந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து இருந்தபோது உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்தன.

தற்போது சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து சரிவர இல்லை. இதனால் நீர்த்தேக்கத்துக்கு வரும் பறவைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

நடவடிக்கை

தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து இடங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் மாவட்ட நிர்வாகம் அகற்ற முன்வர வேண்டும்.

மேலும் கரைகளில் அத்தி, மா போன்ற பழவகை மரங்களை நட்டு வைத்தால் பறவைகள் இளைப்பாறி செல்ல எதுவாக இருக்கும். மேலும் பசுமையாக காட்சிதந்து சிறந்த சுற்றுலா தலமாக மாறி சுற்றுலா பயணிகளை கவரும்படி இருக்கும். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story