கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பாததால் வேளாண்மை துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை


கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பாததால் வேளாண்மை துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பாததால் வேளாண்மை துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு

ஊஞ்சலூர்

கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பாததால் ஊஞ்சலூர் அருகே வேளாண்மை துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதுடன், நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்தரங்கு

ஈரோடு மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கான கருத்தரங்கம் ஊஞ்சலூர் அருகே கொம்பனைப்புதூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ் தலைமை தாங்கினார். செல்வக்குமார சின்னையன் எம்.பி. (ஈரோடு), கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பின்னர் சிறிது நேரத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு கருத்தரங்கு தொடர்ந்து நடந்தது.

முற்றுகை

அப்போது, கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள் காலிங்கராயன் வாய்க்கால் பாசன சபை தலைவர் வேலாயுதம் தலைமையில் மாநில நதி நீர் பாசன திட்ட தலைமை என்ஜினீயர் ஆர்.மணி, ஈரோடு மாவட்ட வேளாண்மை பொறியாளர் துறை உதவி செயற்பொறியாளர் முருகன் ஆகியோரை திடீரென்று முற்றுகையிட்டனர்.

அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள், ‘இந்த நிகழ்ச்சி விவசாயிகளுக்கான நிகழ்ச்சி. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் விவசாயிகள் அனைவருக்கும் முறைப்படி அனுப்பவில்லை. அதுமட்டுமின்றி அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் விவசாயிகள் பேசுவதற்கு வாய்ப்பும் அளிக்கவில்லை,’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

புறக்கணிப்பு

இதனால் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். இந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த செல்வக்குமார் என்ற விவசாயி தற்போது நடைபெற்ற நிகழ்ச்சி விவசாயிகளுக்கான நிகழ்ச்சி இல்லை.

எனவே இந்த கருத்தரங்கை நாங்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஊஞ்சலூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story