சூறாவளிக்காற்றுடன் மழை 15 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் சாய்ந்து நாசம்


சூறாவளிக்காற்றுடன் மழை 15 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் சாய்ந்து நாசம்
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 20 March 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் 15 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் சாய்ந்து நாசம் ஆனது.

அந்தியூர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல், வேம்பத்தி, ஓசைப்பட்டி, வெள்ளாளபாளையம், தாளக்குட்டைப்புதூர், மாக்கல்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சூறாவளிக்காற்று பலமாக வீசியதால் வேம்பத்தியை சேர்ந்த சின்னப்பன் (வயது 60), சம்பத்து (42), சண்முகம் (42), தாளக்குட்டைப்புதூரை சேர்ந்த குருமூர்த்தி (50), மூர்த்தி (37), மாக்கல்புதூரை சேர்ந்த மனோகர் (43), கிருஷ்ணன் (60) ஆகியோரின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.

15 ஏக்கர் பரப்பளவிலான...

அதுமட்டுமின்றி வேம்பத்தியை சேர்ந்த பழனிச்சாமி, வெங்கடாசலம் ஆகியோரின் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிகளும் சாய்ந்து விழுந்தன. இதனால் வாழை மற்றும் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கிணறுகளில் தண்ணீர் இல்லை. ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனினும் அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றி வாழை மரங்களை காத்து வந்தோம். இந்த நிலையில் ஆப்பக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு சூறாவளிக்காற்று வீசியது. இதில் 15 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமாயின. அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.


Next Story