சீமைக்கருவேல மரங்களை அகற்ற மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும்


சீமைக்கருவேல மரங்களை அகற்ற மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 20 March 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

சீமைக்கருவேல மரங்களை அகற்ற விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும் என்று ஆணையர் ஜம்புலிங்கம் பேசினார்.

சீர்காழி,

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதலுக்கான ஆணையர் ஜம்புலிங்கம் தலைமை தாங்கினார். சென்னை ஐகோர்ட்டின் வக்கீல்கள் ஆணையர் விக்னேஷ், சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வராஜ், தாசில்தார் இந்திரா, ஒன்றிய பொறியாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் அஜித்தாபர்வீன் வரவேற்றார். கூட்டத்தில் ஆணையர் ஜம்புலிங்கம் பேசும்போது கூறியதாவது:-

இருமடங்காக வசூலிக்கப்படும்

மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்படி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் விளம்பர பலகை வைக்க வேண்டும். தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால், அந்த மரங்களை பேரூராட்சி செலவில் அகற்றி அதற்கான செலவை இருமடங்காக அபராதம் விதித்து நில உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசன், நகராட்சி மேலாளர் ஆனந்தராஜ், சிறப்பு உதவியாளர் ஜெயராமன், தொழில்நுட்ப உதவியாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story