பொதுமக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் அமைச்சர் பேச்சு


பொதுமக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 20 March 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் நலத்திட்டங்களை பெற்று பொதுமக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நாகையில் நடைபெற்ற தாலிக்கும் தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 178 பெண்களுக்கு ரூ.86 லட்சத்து 63 ஆயிரத்து 936 மதிப்பில் தாலிக்கு தங்கமும், திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி ஆகியவை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு, பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த சமூக நலத் திட்டங்களுக்காக ரூ.65 ஆயிரம் கோடியாக இருந்த நிதியை தமிழக அரசு ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளது.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் தொடங்கிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பெண்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது, 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை பெறும் மக்கள் அதனை நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ், தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஆசைமணி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயமீனா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரமோகன், வெளிப்பாளையம் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story