உடல்நலக்குறைவால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய மினி பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
திருப்பூரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய மினி பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
திருப்பூர்,
திருப்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தறிகெட்டு ஓடிய மினி பஸ் மோதி, 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
நண்பர்கள்உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கன்ஞ் மாவட்டம் பைஜுடேகரா ஊராட்சி கமசின்க்ஹுர்ட் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ்பர்(வயது 33). இவரும் அதே ஊரை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர். அதுபோல், இதே ஊரை சேர்ந்த சுரேஷ்ராஜ்பரின் மற்றொரு நண்பர் (27) திருப்பூரில் வேலை செய்து வந்தார்.
அவரை பார்க்க சுரேஷ்ராஜ்பர், தன்னுடன் வேலைசெய்யும் நண்பரை அழைத்துக்கொண்டு நேற்று ரெயில் மூலம் திருப்பூருக்கு வந்தார். சுரேஷ்ராஜ்பரையும், அவருடன் வந்த நண்பரையும் அழைத்துச்செல்ல திருப்பூரில் வேலை பார்த்த வாலிபர் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். பின்னர் மாலை 4 மணி அளவில் 3 பேரும் திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பழைய பஸ்நிலையத்துக்கு செல்ல குமரன்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
தறிகெட்டு ஓடிய மினி பஸ்அப்போது, பெரியாண்டிப்பாளையத்தில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் மினி பஸ் ஒன்று சுமார் 30–க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குமரன் சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ்சை திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன்(25) என்பவர் ஓட்டி வந்தார். கோர்ட்டு வீதி சந்திப்பை கடந்து சென்ற போது, திடீரென்று மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் தறிகெட்டு ஓடியது.
இதை பார்த்து அந்த பகுதியில் நடந்து சென்ற சுரேஷ்ராஜ்பர் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் உள்பட மேலும் சிலர் பதறியடித்து ஓடினார்கள். அதற்குள் பஸ் சுரேஷ்ராஜ்பர், அவருடைய நண்பர்கள் 2 பேர் மீதும் மோதியது. அத்துடன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மொபட், ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. பின்னர் அங்கிருந்த ஒரு இரும்பு கம்பத்தில் மோதி அந்த கம்பத்தையும் இழுத்தபடி சென்று நின்றது.
2 வாலிபர்கள் சாவுஇந்த விபத்தின் போது மினி பஸ்சில் இருந்த பயணிகள் ‘அய்யோ, அம்மா’ என்று அலறினார்கள். மேலும் இரும்பு கம்பத்தில் மோதியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் பஸ்சில் பயணம் செய்த சில பெண்கள் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தில் சுரேஷ்ராஜ்பரும், அவருடைய நண்பர்கள் இருவர் மீதும் பஸ் ஏறி இறங்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சுரேஷ்ராஜ்பரின் நண்பர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். சுரேஷ்ராஜ்பர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவருக்கு உடல்நலக்குறைவுஇதற்கிடையே சாலையோரம் நின்ற பொதுமக்கள், மினி பஸ்சில் ஏறி, குடிபோதையில் வாகனத்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக கூறி, டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்து, திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு இழுத்துச்சென்று ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, மினி பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த பெண் பயணிகள், மினி பஸ் டிரைவருக்கு திடீரென வலிப்பு வந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் பஸ்சை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதன்காரணமாகத்தான் மினி பஸ் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளாகி விட்டதாக கூறினார்கள். மேலும் விபத்தில் பலியான 2 வாலிபர்களின் பெயர்களும் உடனடியாக தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்சன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.