சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டில் வைத்து விற்பனை செய்தவரிடம் அதிகாரிகள் விசாரணை


சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டில் வைத்து விற்பனை செய்தவரிடம் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 20 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டில் வைத்து விற்பனை செய்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டுத்தனமாக மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்ததும் தெரிந்தது.

நொய்யல்,

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள பெரியவரப்பாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து(வயது 54). இவர் தனது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக, மண்மங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் சுதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சுதா மற்றும் பறக்கும்படை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் செல்லமுத்துவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து சரக்கு வேனில் ஏற்றி, மண்மங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் திருட்டு

இந்த நிலையில் செல்லமுத்து அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, அதனை தனது வீட்டு தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இது குறித்து கரூர் மின்சார வாரிய கோட்ட பொறியாளர் ஜெயசிங் பாஸ்கரனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் பழனிவேல் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது செல்லமுத்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வந்தது தெரிந்தது. பின்னர் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story