பேனா, பேப்பர், மையுடன் ஊர்வலமாக வந்து வடகாட்டில் பொதுமக்கள் போராட்டம்


பேனா, பேப்பர், மையுடன் ஊர்வலமாக வந்து வடகாட்டில் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரி பேனா, பேப்பர், மையுடன் ஊர்வலமாக வந்து வடகாட்டில் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். நல்லாண்டார்கொல்லையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி கோஷங் களை எழுப்பினர்.

வடகாடு,


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் கடந்த 9-ந் தேதி வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

கண்ணீர் அஞ்சலி பதாகை

வடகாடு பெரியகடைவீதியில் நேற்று 15-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேனா, பேப்பர், மை மற்றும் பெரிய அட்டைகளால் செய்யப்பட்ட பேனா போன்ற மாதிரிகளையும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் இறந்துவிட்டதாக கூறி, அதற்கு கண்ணீர் அஞ்சலி பதாகை ஆகியவற்றை ஏந்தியவாறு கருப்பு கொடி பிடித்தபடி ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் போராட்ட பந்தலில் அமர்ந்து, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், விவசாயத்தை முழுவதும் அழிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து நல்லாண்டார்கொல்லையில் 1 மாதத்தை கடந்தும், வடகாட்டில் 15-வது நாளாகவும் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களின் கோரிக்கைகளை ஏற்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம். இத்திட்டத்தை ரத்து செய்ய தேவையான பேனா, பேப்பர் மற்றும் மை ஆகியவற்றை மத்திய அரசுக்கு நாங்களே அனுப்பி வைக்கிறோம். இதை ஏற்று உடனே மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.

கழிவுநீரில் இறங்கினர்

நல்லாண்டார்கொல்லையில் 32-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆழ்துளை கிணறு அருகே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி, இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள். வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story