ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்


ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 20 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி மாநில தலைவர் கணேசன் பேசியதாவது:-

வாக்குறுதி

ஜெயலலிதா தமிழக முதல்- அமைச்சராக இருந்தபோது சட்டசபையில் 110 விதியின் கீழ் மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அறிவித்ததும் மாநில அரசும் அதனை உடனே அமல்படுத்தும். தினக்கூலி, தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள், பண்ணை பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், கிராம சுகாதார பணியாளர்களுக்கும் ஏழாவது ஊதிய குழுவில் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.

போராட்டம்

ஆனால் தமிழக அரசு தற்போது தாக்கல் செய்து உள்ள பட்ஜெட்டில் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகள் பற்றி எதுவும் கூறப்படவில்லை. தற்போது இருப்பதும் அதே அரசு தான். முதல்-அமைச்சர் மட்டும் தான் மாறி இருக்கிறார். ஜெயலலிதாவின் அறிவிப்புகள் பற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படாதது 13½ லட்சம் அரசு ஊழியர்களுக்கும், 5½ லட்சம் ஓய்வூதியர்களுக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிப்படி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் வெள்ளாந்துரை, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்றோர் அலுவலக உதவியாளர் சங்க தலைவர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story