அழகிய நம்பிராயர் கோவிலில் கருட சேவை திரளான பக்தர்கள் தரிசனம்


அழகிய நம்பிராயர் கோவிலில் கருட சேவை திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏர்வாடி,

ஏர்வாடி அருகே திருக்குறுங்குடியில், பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா கடந்த 14–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் காலை, இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்தார்.

கருட சேவை

 5–ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவில் கருடசேவை நடந்தது. நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 திருக்கோலங்களில், 5 சப்பரங்களில் பெருமாள் கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அந்த சப்பரங்கள் ரத வீதிகளில் உலா வந்தன. திரளான பக்தர்கள் கருடசேவை திருக்காட்சியை கண்டு தரிசனம் செய்தனர்.

அதிகாலையில் மகேந்திரகிரி மலையை நோக்கி நின்றதும், சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனையும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

10–ம் நாள் விழாவான வருகிற 23–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


Next Story