எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேரவையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான விருப்ப மனு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதை பலரும் ஆர்வமுடன் பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்தனர். இந்த விருப்ப மனுக்களை மண்டல பொறுப்பாளர்கள் பண்ணை செந்தில்முருகன், ரோகினி என்ற கிருஷ்ணகுமார், சரஸ்வதி, அர்ஜூனன், கருப்பசாமி, ராஜூ, செல்லராஜாமணி ஆகியோரிடம் வழங்கினர்.
மண்டல பொறுப்பாளர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, ‘ஆர்.கே.நகர் தொகுதியில் பலரும் பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கிறோம். ஆர்.கே.நகர் தொகுதியில் தீபாவை எதிர்த்து நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் தோற்றுப்போவார்கள். அங்கு அவர் வெற்றி பெறுவது நிச்சயம். எந்த சின்னம் ஒதுக்கப்பட்டாலும், எங்களுக்கு வெற்றி கிடைக்கும்’ என்றனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.