விஞ்ஞான துளிகள்


விஞ்ஞான துளிகள்
x
தினத்தந்தி 20 March 2017 3:52 PM IST (Updated: 20 March 2017 3:51 PM IST)
t-max-icont-min-icon

இதுவரை உலகின் மிகப்பழமையான தாவர படிமப் பொருள் கனடாவின் ஆர்டிக் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதுதான்.

இந்தியாவில் பழமையான தாவரம் : இது வரை உலகின் மிகப்பழமையான தாவர படிமப் பொருள் கனடாவின் ஆர்டிக் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதுதான். தற்போது இதைவிடப் பழமையான தாவர படிமம் இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் கிடைத்த சிவப்பு பாசி தாவர படிமம் 120 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாகும். மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூடம் என்ற இடத்தில் ஒரு பாறை படிவில் பாசியிழை போல காணப்பட்ட இதன் செல்களை ஆராய்ந்தபோது சிவப்பு பாசியினத்துடன் ஒத்துப்போனது. இதன் காலத்தை அளவிட்டபோது 160 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்தது. எனவே இதுவே இதுவரை கிடைத்த தாவர படிமங்களில் மிகப்பழமையானது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. சுவீடன் நாட்டின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த புவி உயிரியலாளர் தெரஸ் சால்ஸ்டெட் மற்றும் குழுவினர் இதை கண்டறிந்து கூறி உள்ளனர்.

யூ–டியூப் டி.வி. சேவை : தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை வளர்ச்சியாக கூகுள் நிறுவனம் கேபிள் சேவைபோல யூ–டியூப் டிவி சேவையைத் தொடங்கி உள்ளது. இதிலும் ஜியாகிராபி, டிஸ்கவரி உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைக்காட்சி சானல்களையும் பார்க்க முடியும். அத்துடன் முக்கிய தொடர்களை பதிவு செய்து வைத்து ஓய்வு நேரம் கிடைக்கும்போது பார்த்து ரசிக்கவும் வழி இருக்கிறது. தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானாக விளங்கும் கூகுள், கேபிள் சேவையிலும் இறங்கி இருப்பது, மிகுந்த பரபரப்பையும், பலத்த போட்டியையும் உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள யூ–டியூப் லைவ் டி.வி. சேவை விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

சேவையில் மாற்றம் : வாட்ஸ்ஆப் சமூக வலைத்தளத்தில் ‘ஓல்டு ஸ்டேட்டஸ்’ என்ற வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பேஸ்புக் வலைத்தளத்தில் பழைய தகவல்களை திரும்ப நினைவூட்டும் சேவைக்கு போட்டியாக வாட்ஸ்ஆப் இந்த வசதியை அறிமுகம் செய்தது. ஆனால் அவ்வளவு வரவேற்பு இல்லாததும், எதிர்மறையாக புகார்கள் குவிந்ததாலும் அந்த சேவையை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது வாட்ஸ்ஆப்.

ஜிமெயிலில் வீடியோ அனுப்பலாம் : முன்னணி மின்னஞ்சல் தளமாக விளங்கும் ஜிமெயிலில் குறைந்த அளவுள்ள தகவல்களையே பரிமாற்றம் செய்ய முடிந்தது. தற்போது இந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 50 எம்.பி. அளவுடைய தகவல்களை இணைத்து அனுப்பும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல இதே அளவுடைய வீடியோக்களையும் பகிரும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை செல்போன் வழியே ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் அனுபவிக்க முடியாது. கணினி மற்றும் மடிக்கணினி பயன்படுத்தும்போது இந்த சேவையை பெற முடியும்.

வீடியோ ரசனை : சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் வழியே அதிக வீடியோக்கள் ரசிக்கப்படுவது புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. ஒரு லட்சத்து 67 ஆயிரம் கணக்குகளை 6 மாத காலத்திற்கு ஆய்வு செய்தபோது 47 சதவீத வீடியோக்கள் பேஸ்புக் வழியே ரசிக்கப்பட்டது உறுதியானது. 30 சதவீதம் பேர் யூடியூப்பில் வீடியோக்களை ரசிக்கிறார்கள். 9 சதவீதம் பேர் விமியோ தளத்தையும், மற்றவர்கள் இதர வலைத்தளங்களையும் ரசிக்கிறார்கள். ‘ஆட்வீக்’ என்ற இணைய நிறுவனம் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

விண்ணில் குட்டி ஆய்வகம் : விண்ணில் தானியங்கி முறையில் செயல்படும் குட்டி ஆய்வகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 500 கிலோ மீட்டருக்கு மேல், செயற்கைக் கோள் போல சிறிய ஆய்வகத்தை சுற்ற விட்டுள்ளனர். ‘ஸ்பேஸ் பார்மா’ எனப்படும் இந்த ஆய்வகம் ஒரு சாக்லெட் டப்பா அளவுக்கு மிகச்சிறியது. சுவிட்சர்லாந்து, இஸ்ரேல் நாடுகள் இணைந்து இதை விண்ணிற்கு அனுப்பி உள்ளன. இது பூமியின் ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வை மேற்கொள்ளும். அத்துடன் மருத்துவம் மற்றும் வேளாண்மை ஆகியவற்றின் உதவிக்கான ஆராய்ச்சிகளிலும் உதவும்.

Next Story