குடியாத்தம் அருகே கூடநகரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை
குடியாத்தம்,
குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மேல்ஆலத்தூர் மின்வாரியம் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அணங்காநல்லூருக்கு அரசு டவுன் பஸ் அந்த வழியாக வந்தது. மறியலில் ஈடுபட்டவர்கள் அந்த பஸ்சை சிறைபிடித்தனர்.
தேர்வு எழுதுவதற்கு செல்லும் பள்ளி மாணவர்கள் அந்த பஸ்சில் இருந்ததால் அவர்கள் சரியான நேரத்துக்கு தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் சில நிமிடங்களில் பஸ்சை விடுவித்து தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாகூரான், வருவாய் ஆய்வாளர் தேவி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவாத்தை நடத்தி சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.