வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 6:29 PM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்

வேலூர்,

காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கடந்த 14–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். பொறியாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம், உதவி இயக்குனர் உள்ளிட்ட காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காத்திருப்பு போராட்டம்

வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக கடந்த 17–ந் தேதி வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதில் அரக்கோணம், திருப்பத்தூர், ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, வாலாஜா உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடக்கும் அரங்கிற்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த காத்திருப்பு போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story