சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்திய இளைஞர்கள்


சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து  காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்திய இளைஞர்கள்
x
தினத்தந்தி 21 March 2017 4:00 AM IST (Updated: 20 March 2017 7:31 PM IST)
t-max-icont-min-icon

பேஸ்புக், வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து காளையார்கோவில்

காளையார்கோவில்,

தெப்பக்குளம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பாரம்பரியமிக்க சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை மருது சகோதரர்கள் கட்டினார்கள் என்ற வரலாற்று சிறப்பும் உண்டு. காளையார்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளமே காளையார்கோவில் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த தெப்பக்குளத்தில் நீர் நிரம்பவில்லை. இதனால் காளையார்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. பருவமழை பொய்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும், தெப்பக்குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், அவை சரியாக பராமரிக்கப்படாததாலும் நீர்வரத்து இன்றி தெப்பக்குளம் வறண்டுவிட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் ஒத்துழைப்புடன் தன்னார்வலர்கள், ஜே.சி.பி. எந்திரங்களை வைத்து வரத்துக் கால்வாயில் உள்ள குப்பைகளையும், முட்புதர்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.

குப்பைகளை அகற்றினர்

தற்போது தெப்பக்குளத்தின் உட்பகுதியில் சிலர் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் குளத்தில் குப்பைகள், புதர்கள் நிறைந்து காணப்பட்டது. இதனை கண்ட இப்பகுதி இளைஞர்கள் பேஸ்புக், வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து குளத்தில் உள்ள குப்பைகள், புதர்களை அகற்றி தூய்மைப்படுத்த முடிவு செய்தனர். மேலும் தங்களது நண்பர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுத்தனர். அதன்படி 200–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு சொர்ண காளீஸ்வரர் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தினர். பின்னர் இளைஞர்கள் கூறும்போது, இந்த தூய்மை பணி முதல் கட்டம் தான் என்றும், இனி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க இதுபோன்ற பணிகள் தொடரும் என்றும் கூறினர்.


Next Story