கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 7:50 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

காத்திருக்கும் போராட்டம்

ஊராட்சி செயலாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கணினி இயக்குபவர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை நிரந்தர பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 14–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் 7–வது நாளான நேற்று மாவட்ட தலைநகரங்களில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகம் முன்பு

அந்த வகையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் வீரமணி, செல்வராஜ், பெரியசாமி, செல்வம், இணை செயலாளர்கள் சுகுமார், தமிழ்மணி, உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், சரவணன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஜனார்த்தனன், முன்னாள் மாவட்ட செயலாளர் காசிநாதன், உணவு பாதுகாப்புத்துறை பணியாளர் சங்க மாநில பொருளாளர் ரவிச்சந்திரன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். போராட்டம் இன்றும்(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தேர்தல் பணிகள் பாதிப்பு

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் காலவரையற்ற போராட்டத்தினால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் மற்றும் சுகாதார திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மத்திய–மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story