நெல்லிக்குப்பம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் சமையல் எண்ணெய், உளுந்து வழங்கக்கோரி நடந்தது
நெல்லிக்குப்பம் அருகே சமையல் எண்ணெய், உளுந்து வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லிக்குப்பம்,
வாக்குவாதம்
நெல்லிக்குப்பம் அருகே பல்லவராயநத்தம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் கடந்த 3 மாதங்களாக துவரம் பருப்பு, சமையல் எண்ணெய்(பாமாயில்), உளுந்து உள்ளிட்ட பொருட்கள் வழங்கவில்லை. இந்த நிலையில் அந்த ரேஷன் கடையில் நேற்று காலையில் துவரம் பருப்பு வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காக கிராம மக்கள், வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது கிராம மக்கள், கடந்த 3 மாதங்களாக துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், உளுந்து உள்ளிட்ட பொருட்கள் வழங்காதது ஏன்? என கூறி விற்பனையாளர் சண்முகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்மேலும் கிராம மக்கள் அனைவருக்கும் சமையல் எண்ணெய், உளுந்து ஆகிய பொருட்களை உடனடியாக வழங்கக்கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ரேஷன் கடை விற்பனையாளர் சண்முகம், அரசு வழங்குகிற பொருட்களை வினியோகம் செய்து வருகிறோம். ரேஷன் கடையில் பொருட்களை இருப்பு வைப்பதில்லை. சமையல் எண்ணெய், உளுந்து வந்ததும், கிராம மக்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.