தாரமங்கலம் அருகே வீட்டு சுற்றுச்சுவரில் கார் மோதி விசைத்தறி தொழிலாளி சாவு 2 நண்பர்கள் படுகாயம்
தாரமங்கலம் அருகே வீட்டு சுற்றுச்சுவரில் கார் மோதி விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாரமங்கலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கோட்டமேடு கருக்கல்வாடி பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ( வயது 25). இவருடைய நண்பர்கள் சரவணகுமார் (28), ஜெய்சங்கர் (36). இவர்கள் 3 பேரும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு காரில் 3 பேரும் மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அதிகாலை 3.30 மணிக்கு கருக்கல்வாடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த காரை ஜெய்சங்கர் ஓட்டினார். வழியில் சேவகனூர் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த வீட்டு சுற்றுச்சுவர் மீது பயங்கரமாக மோதியது.
பரிதாப சாவுஇந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதில் வந்த சுந்தர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது நண்பர்கள் சரவணகுமார், ஜெய்சங்கர் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த சுந்தருக்கு மீனா என்ற 6 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். அவர் கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.