தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு
தர்மபுரி,
காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந்தேதி முதல் மாநிலந்தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையில் உள்ள அலுவலர்கள் என 750 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் கடந்த சில நாட்களாக ஊழியர்கள், அலுவலர்களின்றி செயல்படாமல் உள்ளன. இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலிப்பணியிடங்கள்இந்த போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்குமரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், வேளாண் அமைச்சு பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகி யோகராசு, பட்டுவளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசம், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராமஜெயம், கார்த்திகேயன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பவை உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுதொடர்பாக போராட்டக்குழுவினர் கூறுகையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் காலவரையற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக காத்திருக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இரவிலும் இதே பகுதியில் தங்கி போராட்டத்தை தொடருவோம் என்று தெரிவித்தனர்.