கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை


கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 9:36 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைக்க வலியுறுத்தி

ராசிபுரம்,

ஆழ்துளை கிணறு

நாமகிரிபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது கார்கூடல்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பிலிப்பாகுட்டை பகுதியில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை. அதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் அவர்களை சந்தித்து உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துவிட்டுச் சென்றனர். அதையொட்டி அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று அப்போது பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் பிலிப்பாகுட்டை பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக புதிய ஆழ்துளை கிணறு அமைக்க இடத்தை தேர்வு (பாயிண்ட்) செய்தனர். ஆனால் அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தாமதம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

எனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிலிப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் உடனடியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பெண்கள் தெரிவித்தனர்.

பின்னர் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களுடன் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி சிவப்பிரகாசம், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், ஆயில்பட்டி சப்–இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்படும் என்று கூறினார்கள். இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story