சூப்பிரண்டு உத்தரவை மீறி செயல்பட்ட மேலூர் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவை மீறி செயல்பட்ட மேலூர் இன்ஸ்பெக்டர்
மதுரை,
மேலூரை அடுத்த அ.வல்லாளபட்டி அருகே உள்ள சாம்பிராணிபட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். சாம்பிராணிபட்டி விவசாயிகள் சங்கத்தலைவரான இவர், மதுரை கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:–
என் மீதும், என் சகோதரர் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீதும் முத்துராமலிங்கம் என்பவர் கொடுத்த பொய் புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நான் கொடுத்த புகாரின் பேரில் முத்துராமலிங்கம் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் முறையாக விசாரிக்காமல், முத்துராமலிங்கத்துக்கு சாதகமாக செயல்பட்டார். இதனால் இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தேன்.
கலெக்டரிடம் மனுஅதைதொடர்ந்து அவர், இந்த வழக்கின் விசாரணையை மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு புறம்பாக என் மீதும், என் சகோதரர் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் மேலூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்.
எனவே, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவை மீறி செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.