பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல் செஞ்சி அருகே பரபரப்பு


பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல் செஞ்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 20 March 2017 9:45 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்

செஞ்சி,

டாஸ்மாக் கடை

செஞ்சி அருகே நாட்டார்மங்கலம்–மொடையூர் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்தும் குடிமகன்கள் சிலர் போதை தலைக்கேறியவுடன் சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் கேலி–கிண்டல் செய்து வருவதாக தெரிகிறது. ஒரு சில குடிமகன்கள் போதையில் ஆடைகள் அவிழ்ந்த நிலையில் அலங்கோலமாக சாலையோரம் படுத்து கிடக்கின்றனர். இந்த சம்பவங்களால் நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் தினந்தோறும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த நாட்டார் மங்கலம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11.30 மணியளவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி அங்குள்ள நாட்டார்மங்கலம்– மொடையூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபெண்களிடம் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பெண்கள் மதியம் 12 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story