ஓமலூர் அருகே ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு விபத்தில் பலி மொபட் மீது டிப்பர் லாரி மோதியது
ஓமலூர் அருகே நடந்த விபத்தில் மொபட் மீது டிப்பர் லாரி மோதி ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பலியானார்.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த எம்.செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 75). இவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு சசிகுமார்(39) என்ற மகனும், பிரபாவதி(37) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் மகன் வழி பேத்தி ஹேமாவர்ஷினி தனது தாத்தா மாணிக்கத்திடம் கைக்கடிகாரம் கேட்டு உள்ளார். இதனை அடுத்து பேத்திக்கு கடிகாரம் வாங்க தனது மொபட்டில் மாணிக்கம் ஓமலூர் சென்றார். பின்னர் கடிகாரம் வாங்கி கொண்டு எம்.செட்டிபட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஓமலூர்–தாரமங்கலம் ரோட்டில் ஆட்டுகாரனூரில் உள்ள எம்.செட்டிபட்டி ஏரிக்கரை அருகே மொபட் திரும்பும் போது ஓமலூரில் இருந்து தாரமங்கலம் நோக்கி பின்னால் வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது. இதில் மாணிக்கத்தின் மொபட் டிப்பர் லாரி டயரில் சிக்கி அரை கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் இழுத்துக் கொண்டு சென்றது. இதில் மாணிக்கத்தின் உடல் சிதைந்து அதே இடத்தில் பலியானார். இதனையடுத்து டிப்பர் லாரி டிரைவர் வண்டியை விட்டு விட்டு தப்பி ஒடி விட்டார்.
வழக்குப்பதிவுஇது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்–இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த விபத்து காரணமாக ஓமலூர்–தாரமங்கலம் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.