‘ஆவின்’ பாலில் கலப்படம், அளவு குறைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்


‘ஆவின்’ பாலில் கலப்படம், அளவு குறைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

‘ஆவின்’ பாலில் கலப்படம், அளவு குறைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் மாநில அமைப்பாளர் அயிலை சிவசூரியன் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

‘ஆவின்’ பால்

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியமான ‘ஆவின்’ நிறுவனத்திற்கு திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் 4½ லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. உற்பத்தியாளர் சங்கங்களில் பால் கொள்முதல் செய்யப்படும்போது ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சோதனை கருவி மூலம் கொழுப்பு சத்து, இதர சத்து என தர சோதனையும், எடை அளவும் சரிபார்த்து தான் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் வாகனங்கள் மூலம் திருச்சியில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆவின் நிறுவனத்தில் பால் சோதனை செய்யப்படும்போது பாலில் தண்ணீர் கலப்படம் இருப்பதாகவும், 5 முதல் 10 லிட்டர் வரை அளவு குறைவதாகவும் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் சங்கங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பல பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பெரும் இழப்பிற்கு உள்ளாகி மூடும் அபாயம் ஏற்படுகிறது. ஏற்கனவே சோதனை செய்து அனுப்பப்படும் பாலில் கலப்படம் மற்றும் எடை அளவு குறைகிறது என்றால் பால் கொண்டு வரும்போது வாகனங்களில் முறைகேடு நடைபெறுகிறதா? அல்லது ஆவின் நிறுவனத்தில் திட்டமிட்டு குளறுபடிகள் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விவசாயிகள் கோரிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியின் மாநில தலைவர் புலியூர் நாகராஜன் விவசாயிகளுடன் வந்து கொடுத்த மனுவில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் டெல்லியில் கடந்த 7 நாட்களாக விவசாய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் வழங்க கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் டெல்லியில் இருந்தாலும், விவசாயிகளுக்கு உதவி செய்யப்படவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்-அமைச்சர் டெல்லி சென்று, விவசாயிகளின் கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கையை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்று கூறி இருந்தனர்.

மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தினர் திருச்சி விமான நிலையம் வயர்லஸ் சாலையில் பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் மதுபான கடை வைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி மனு கொடுத்தனர். 

Next Story