டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கீழா நிலைக்கோட்டையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை நெடுஞ்சாலையில் உள்ளதால் கோர்ட்டு உத்தரவுபடி வருகிற 31-ந்தேதிக்குள் கடையை அகற்ற அதிகாரிகள் ்நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த கடையை அகற்றி கீழாநிலைக்கோட்டை அருகே புதுநிலைவயல் ஊராட்சி பகுதிக்கு டாஸ்மாக் கடையை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

சாலை மறியல்

இதுகுறித்து அறிந்த கீழாநிலைக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் நேற்று சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பின்னர் காரைக்குடி- அறந்தாங்கி சாலையில் உள்ள தொடக்கப்பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் பால்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் உறுதி

ஆனால் பொதுமக்கள் மறியலை கைவிடாமல், மாவட்ட கலெக்டர் வந்து, கடை அகற்றப்படும் என உறுதி தரும் வரை மறியல் தொடரும் என அறிவித்தனர். பின்னர் போலீசார் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மறியல் குறித்து தெரியப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தற்போது செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், கீழாநிலைக்கோட்டையில் டாஸ்மாக் கடை வைக்க வேண்டாம் என்றால், அதற்கு தனியாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story