பூச்சொரிதல் விழாவுக்கு சென்று திரும்பிய 2 பெண் பக்தர்கள் பலி; 20 பேர் காயம்


பூச்சொரிதல் விழாவுக்கு சென்று திரும்பிய 2 பெண் பக்தர்கள் பலி; 20 பேர் காயம்
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 21 March 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு சென்று திரும்பியபோது, சரக்கு வேன் கவிழ்ந்ததில் 2 பெண் பக்தர்கள் பலியானார்கள். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள ஆலம்பட்டி புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு சமயபுரம் மாரியம்மன் கோவில் 2-வது வார பூச்சொரிதல் விழாவுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை எடுத்து சென்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று அதிகாலை ஒரு சரக்கு வேனில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அந்த வேனில் 4 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் நின்று கொண்டே பயணம் செய்தனர். ராஜா என்பவர் சரக்கு வேனை ஓட்டினார்.

கவிழ்ந்தது

திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் மன்னார்புரம் மேம்பாலத்தை தாண்டி ராஜராஜன் நகருக்கு செல்லும் இறக்கம் அருகே சென்றபோது, சரக்கு வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த அனைவரும் தூக்கி எறியப்பட்டு அய்யோ, அம்மா என அலறினார்கள்.

காலை 6.30 மணி அளவில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் போலீசார் மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

2 பெண்கள் பலி

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செல்வராணி (வயது 33) என்ற பெண் பரிதாபமாக இறந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் (60) என்பவர் இறந்தார். இவர்கள் தவிர காயம் அடைந்த 20 பேரும் அரசு மருத்துவமனையிலும், 3 தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து பற்றி திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா, ஏட்டுகள் ஜெயக்குமார், முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சரக்கு வேனை ஓட்டிய ராஜாவும் ஒருவர். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story