ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை சாவு


ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை சாவு
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 21 March 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் உள்ள குருவன்கோட்டை, சாலைப்புதூர், கழுநீர்குளம் ஆகிய பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி அன்னை நகரைச் சேர்ந்தவர் பணிராஜ். இவருடைய 6 மாத ஆண் குழந்தை பவின். குழந்தை பவின் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து பெற்றோர் அவனை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

குழந்தை சாவு

பின்னர் குழந்தை பவின் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குழந்தை பவின் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து ஆண்டிப்பட்டியில் உள்ள பணிராஜ் வீட்டிற்கு மட்டும் சுகாதார துறையினர் நோய் தடுப்பு மருந்துகளை தெளித்தனர்.

ஆண்டிப்பட்டியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் யூனியன் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சாலைப்புதூர், பூபாலசமுத்திரம், இலங்காபுரிபட்டணம், நவநீதகிருஷ்ணபுரம், சுந்தரலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்காபுரிபட்டணத்தை சேர்ந்த ராமசாமியின் மகள்கள் யோகராமலட்சுமி (12), பியூராமலட்சுமி (11), சுடலை மகன் மாதவன் (7), சந்திரசேகர் மகன் பிரவீன் (5) உள்பட 20–க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story