குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க்க எதிர்ப்பு, கலெக்டரிடம் மனு
குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி மதுபாட்டில்களுடன் வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.
அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4–வது வார்டு செயலாளர் ராஜா மற்றும் அதன் நிர்வாகிகள் காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
துடியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுக்கடையை இடமாற்றம் செய்து, கோவை மாநகராட்சி 4–வார்டுக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகளின் நடுவே மதுக்கடை அமைந்தால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் சமூக விரோத செயல்கள் நடைபெற வழிவகுக்கும். எனவே இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மதுக்கடைஅரசூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் நடுவே மதுக்கடை அமைக்கப்பட உள்ளது. மதுக்கடை அமைந்தால் மது குடிக்க வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.விபத்துகள் அதிகமாக நடக்கும். மேலும் இங்குள்ள விசாகா நகர், கருணாம்பிகை நகர், சுப்பராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் அமைய உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல் கோவை மாநகராட்சி 41 மற்றும் 42–வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் அரசு மதுக்கடை அமைக்க முடிவு செய்து உள்ளது. எனவே மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.
குடிநீர் பிரச்சினைஎட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட க.க.சாவடி காமராஜபுரம் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், காமராஜபுரம் பகுதியில் நாங்கள் பல வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். ஆகவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சுல்தான்பேட்டை ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளர் பரமசிவம் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
பாப்பம்பட்டி ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் சரிவர செய்யவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பருவமழை பொய்த்து போனதால் 7 ஆழ்துளை கிணறுகளில் கிடைத்து வந்த தண்ணீரும் தற்போது கிடைப்பதில்லை. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க பில்லூர் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் தற்காலிகமாக அப்பகுதி பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே பகுதியில் நிலவும் உப்புத்தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதன் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பொம்மலாட்ட கலைகோவைப்புதூர் பகுதியை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் சீனிவாசன் கொடுத்த மனுவில், தமிழகத்தில் பொம்மலாட்ட கலை தற்போது அழிந்து வருகிறது. பொம்மலாட்ட கலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பொம்மலாட்டம் மூலம் கல்வி அறிவை வளர்க்க உதவி செய்ய வேண்டும். மேலும் அரசியல் திட்ட தெருமுனை பிரசாரங்களுக்கு பொம்மலாட்ட கலையை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.