திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை வழக்கு: கோர்ட்டில் 2 பேர் சரண்
திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை வழக்கு: கோவை கோர்ட்டில் 2 பேர் சரண்
கோவை,
கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் பாரூக்(வயது 31). திராவிடர் விடுதலை கழக பிரமுகரான இவர் கடந்த 16–ந் தேதி உக்கடம் கழிவுநீர் பண்ணையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது பற்றி கோவை பெரிய கடை வீதி போலீசார் நடத்திய விசாரணையில் பாரூக் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர் என்றும் அத்தகைய கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததால் கொலை செய்யப்பட்டார் எனவும் தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 17–ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்த அதே பகுதியை சேர்ந்த அன்சாத்(31) என்பவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(32) என்பவர் கோவை கோர்ட்டில் நேற்று காலை சரண் அடைந்தார். இதே போல மாலை கோவை கரும்புக்கடையை சேர்ந்த சம்சுதீன்(31) என்பவரும் கோர்ட்டில் சரண் அடைந்தார். இருவரையும் 3–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதையடுத்து 2 பேரையும் சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.