டெங்கு நோயை பரப்பும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் கிணறுகளில் விடப்படும் கலெக்டர் ரவிகுமார் தகவல்


டெங்கு நோயை பரப்பும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் கிணறுகளில் விடப்படும் கலெக்டர் ரவிகுமார் தகவல்
x
தினத்தந்தி 21 March 2017 3:45 AM IST (Updated: 21 March 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக 60 ஆயிரம் மீன் குஞ்சுகளை தூத்துக்குடியில் உள்ள கிணறுகளில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ரவிகுமார் கூறினார்.

தூத்துக்குடி,

இதுகுறித்து அவர், கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஸ்மார்ட் கார்டு

ரே‌ஷன் பொருட்கள் விற்பனை முனைய எந்திரத்துடன்(பாயிண்ட் ஆப்சேல்) முழுமையாக ஆதார் எண், செல்போன் எண் இணைக்கப்பட்டு உள்ளது. இதில் பெயர் உள்ளிட்டவைகளில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சம்பந்தப்பட்ட இணையதளம் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம்.

வருகிற 28, 29–ந் தேதிகளில் ஸ்மார்ட் கார்டு அச்சடித்து மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 896 கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகள் அனைத்தும் பொதுவான இடங்களில் வைத்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரம் பாழடைந்த கிணறுகள் உள்ளன.

அந்த கிணறுகளில் உள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் நடவடிக்கையாக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. இதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து 60 ஆயிரம் கம்பூசியா மீன் குஞ்சுகள் வாங்கப்பட்டு, கிணறுகளில் விடப்படும்.

கோவில்பட்டியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது அணைகளில் உள்ள தண்ணீர் மூலம் மே மாதம் முதல் வாரம் வரை குடிநீர் வழங்க முடியும்.

இவ்வாறு கலெக்டர் ரவிகுமார் கூறினார்.

தூத்துக்குடியில் கருணை அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு, அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை கலெக்டர் ரவிகுமார் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராசையா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story