சீரான குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
அவினாசி அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொங்குபாளையம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அவினாசி
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பகுதியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகிறார்கள். இந்த பகுதிக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் 30 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி ஊராட்சியில் 24 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இவற்றுக்கு பெருமாநல்லூரில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
பொங்குபாளையம் ஊராட்சி பரமசிவம்பாளையம், பூத்தார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் ஏற்றுவதில்லை எனத்தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு 3–வது திட்ட குடிநீர் சீராக வழங்கப்படவில்லை. எனவே இந்த பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
அலுவலகம் முற்றுகைஇந்தநிலையில் இந்த பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டியும், ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டியும், புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டியும், அப்பகுதி கிராம மக்கள் பொங்குபாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) அப்புசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஈஸ்வரன், சுப்பிரமணியம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் பெருமாநல்லூர் போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் தமிழரசன் ஆகியோர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சுழற்சி முறையில் இந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புகளுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.