திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து: தேசிய தகவல் மையம் எரிந்து நாசம்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து: தேசிய தகவல் மையம் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 21 March 2017 4:45 AM IST (Updated: 21 March 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் தேசிய தகவல் மையம் முழுவதும் எரிந்து நாசமானது. ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர்–பல்லடம் ரோட்டில் எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரி அருகில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு, கடந்த 2015–ம் ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மொத்தம் 7 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், மாவட்ட கல்வித்துறை அலுவலகம், முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலகம், கனரா வங்கி, வேளாண்மை துறை அலுவலகம் உள்ளிட்ட 32–க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். நேற்று திங்கட்கிழமை என்பதால் வழக்கம் போல் ஊழியர்கள் காலையிலே பணிக்கு வந்திருந்தனர். மேலும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காகவும், வேறு பல்வேறு பணிகளுக்காகவும் மாவட்டம் முழுவதில் இருந்து ஏராளமான பொதுமக்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனால் காலை முதலே கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் 2–வது தளத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம், கூட்ட அரங்கம், தேசிய தகவல் மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மின்கசிவால் தீவிபத்து

இந்தநிலையில் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் அனைத்து துறை அலுவலகங்களுக்கும் தேசிய தகவல் மையத்தின் மூலம் இணையதள சேவை, கணினி அமைப்பு உள்ளிட்டவை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 7 ஊழியர்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர். மாலை 4 மணியளவில் இந்த அலுவலகத்தின் இணையதள வசதி அறையில் உள்ள குளிர்சாதன கருவியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவு காரணமாக குளிர்சாதன கருவியில் இருந்து கரும்புகை எழும்பியுள்ளது. சிறிது நேரத்தில் அந்த கருவி தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்த அலுவலக ஊழியர்கள் உடனடியாக தீ, தீ என்று சத்தமிட்டபடியே அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.

தீவிபத்து ஏற்பட்ட தகவல் உடனடியாக கட்டிட வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் பரவியது. இதைத்தொடர்ந்து, பிற அலுவலகங்களிலும் பணியில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து பதற்றத்துடன் வெளியேறினார்கள். சிறிய அளவில் பற்றி எரிந்த தீ நேரம் செல்ல செல்ல அந்த அறை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் இதற்கு பயன்படுத்தப்பட்டன. மேலும், அலுவலகத்திற்குள் ஊழியர்கள் யாராவது சிக்கியுள்ளார்களா? எனவும் தீயணைப்பு வீரர்கள் சோதனை நடத்தினார்கள். ஆனால் அலுவலர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேறி இருந்தனர். சுமார் 45 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

பொருட்கள் எரிந்து நாசம்

இந்த பயங்கர தீவிபத்தால் தகவல் மையத்தில் பயன்படுத்தப்பட்ட கணினிகள், இருக்கைகள், குளிர்சாதன பொருட்கள் மற்றும் அனைத்து அலுவலகங்களுக்கான இணையதள வசதிக்கான கட்டுப்பாட்டு கருவிகள் உள்பட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பினாலான மின்னணு சாதனங்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆனது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஊழியர்களுக்கோ, மற்றவர்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்பட்டவில்லை.

இதைத்தொடர்ந்து, கலெக்டர் எஸ்.ஜெயந்தி, தீவிபத்து ஏற்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், எவ்வாறு தீவிபத்து ஏற்பட்டது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கலெக்டர் எஸ்.ஜெயந்தி கூறியதாவது, ‘‘மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தீவிபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சேதமாகவில்லை. நாளை முதல் மற்ற துறைகள் வழக்கம் போல செயல்படும்’’ என்றார்.

கலெக்டர் இருந்த 2–வது தளத்தில் நடந்த தீவிபத்து

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் 2–வது தளத்தில் தேசிய தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று மாலை திடீரென குளிர்சாதன கருவியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. இதே தளத்தில் தான் மாவட்ட கலெக்டர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை தொடங்கிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மதியம் முடிவடைந்தது. இதில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை கலெக்டர் எஸ்.ஜெயந்தி பெற்றுக்கொண்டார். இந்த கூட்டம் மதியம் 2.30 மணியளவில் முடிந்தது. பின்னர், கலெக்டர் 2–வது தளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து அலுவலக பணிகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தீ அதிகமாக பரவுவதற்கு முன்னரே தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. கரும்புகை அதிகமாக இருந்ததாலும், தீயணைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மற்றும் மற்ற அலுவலர்களுக்கும் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அலுவலகத்தில் இருந்து வந்த கலெக்டர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் போதே அதே தளத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

படிக்கட்டு வழியாக வெளியேறிய ஊழியர்கள்

தேசிய தகவல் மைய அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து இதுகுறித்த தகவல் கட்டிடம் முழுவதும் பரவியது. இதையடுத்து கட்டிடத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் லிப்ட் செயல்படவில்லை. எனவே ஊழியர்கள் அனைவரும் படிக்கட்டு வழியாக அவசர அவசரமாக இறங்கி கட்டிடத்தை விட்டு வெளியேறினார்கள். வெளியேறிய அவர்கள் அங்கு பதற்றத்துடனேயே நின்றிருந்தனர். தீ முழுவதும் அணைக்கப்பட்ட பின்னர் மின்சாரம் வினியோகம் சீரானது.

அதிகளவு தீதடுப்பு சாதனங்கள் வைக்க ஊழியர்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகளவிலான தீ தடுப்பு கருவிகள் வைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கட்டிட விதிமுறைகள்

மாநகரம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பஞ்சாயத்து என எந்த பகுதிகளாக இருந்தாலும் அங்கு கட்டிடம் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தால் கட்டிடம் கட்டுவதற்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகம் உண்டு. உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதி பெற்று கட்டப்படும் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினரிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவது கட்டாயம்.

தனியார் கட்டிடங்களாக இருந்தாலும், அரசு கட்டிடங்களாக இருந்தாலும் அந்த கட்டிடத்தில் முறையான தீயணைப்பு சாதனங்கள், அவசரகால வழிகள், தீத்தடுப்பு சாதனங்கள் உள்ளிட்டவை இருக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால்தான் தீயணைப்பு துறையில் இருந்து தடையில்லா சான்று பெறுவதற்கு தகுதியான கட்டிடமாக அது கருதப்படும். ஆனால் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் ஒருசில பகுதிகளில் மட்டுமே சிறிய அலுவலகங்கள், நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதிகளவு தீயணைப்பு சாதனங்கள்

அவசரகால எச்சரிக்கைக்கான கருவிகளோ, அவசரகால வழிகளோ எதுவும் இந்த கட்டிடத்தில் இல்லை. மேலும், ஆயிரக்கணக்கான அலுவலர்கள் வேலை பார்க்கும் இந்த கட்டிடத்தில், குறிப்பிட்ட வெப்ப நிலையில் தானாகவே தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் கருவி மற்றும் ஒவ்வொரு தளத்திலும் தீவிபத்தின் போது பயன்படுத்துவதற்கான பெரிய அளவிலான தண்ணீர் குழாய்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இதில் ஒரு வசதிகூட இந்த கட்டிடத்தில் செய்யப்படவில்லை. தற்போது ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக மாநகராட்சி லாரிகள் மற்றும், தீயணைப்பு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீரே பயன்படுத்தப்பட்டது. கட்டிடம் முழுவதும் தீ பரவி இருந்தால் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருக்கும். இதனால் தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்களை உடனடியாக அதிகளவில் இந்த கட்டிடத்தில் வைத்து, அங்கு பணியாற்றும் அலுவலர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று பணியாற்றும் அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story