பனியன் குடோனில் தீ விபத்து; உடல் கருகி மூதாட்டி சாவு
பவானி அருகே பனியன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தளவாய்ப்பேட்டையை சேர்ந்தவர் மாரசாமி. பனியன் கழிவு துணிகளை வாங்கி கால் மிதியடி தயாரித்து அதை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக இவருடைய வீட்டின் அருகில் ஒரு குடோன் உள்ளது. இங்கு 8 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த குடோனில் உள்ள ஒரு அறையில் அவருடைய தாய் குருவாயம்மாள் (வயது 75) தங்கி இருந்தார். மேலும் மாரசாமி தினமும் இரவில் குடோனில் படுத்து தூங்கிவிட்டு அதிகாலை 5 மணி அளவில் அருகில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு செல்வது வழக்கம்.
உடல் கருகி சாவுஇதேபோல் நேற்று முன்தினம் இரவு குருவாயம்மாள் தன்னுடைய அறையில் தூங்கினார். மாரசாமியும் குடோனுக்கு வெளியே வழக்கம்போல் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் மாரசாமி தன்னுடைய வீட்டுக்கு சென்றுவிட்டார். 6 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை வந்து உள்ளது.
சிறிது நேரத்தில் கழிவு துணியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் குருவாயம்மாள் வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
விசாரணைதீவிபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன், பவானி நிலைய அதிகாரி கிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பனியன் கழிவு துணி மற்றும் கால் மிதியடிகள் எரிந்து நாசம் ஆனது. பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குருவாயம்மாளின் உடலை கைப்பற்றி பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.